அரசு கட்டிடங்களில் சட்டவிரோத சுவர் விளம்பரங்களை உடனே அகற்ற வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பொது இடங்கள், அரசு கட்டிடங்களில் சட்டவிரோத சுவர் விளம்பரங்களை உடனே அகற்ற வேண்டும் என்று அரசு தலைமை செயலாளர், தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்பட 7 துறைகளின் செயலாளர்களுக்கும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தலைவருக்கும், தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கும் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-
சென்னை மாநகரை அழகுபடுத்தும் நோக்குடன் பாலங்கள் மற்றும் அரசு கட்டிடங்களின் சுவர்களில் விளம்பரங்கள் செய்வதும், சுவரொட்டிகளை ஒட்டுவதும் தடை செய்யப்பட்டிருக்கின்றன. சென்னை மாநகரத்தின் சுவர்களில் அழகான ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.
அரசியல் கட்சிகள் விளம்பரம்
நமது கலாசாரத்தை பிற மாநிலத்தவருக்கும், பிற நாட்டவருக்கும் தெரிவிக்கும் வகையில் வரையப்படும் சுவர் ஓவியங்கள் காண்பவர்களின் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. அதேபோல், ஐகோர்ட்டு வழிகாட்டுதலின் காரணமாக, சாலைகளின் அழகைக் கெடுத்த பதாகைகளுக்கும் கிட்டத்தட்ட முடிவுகட்டப்பட்டுவிட்டது.
ஆனால், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் அரசு அலுவலகங்களை விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகள் மூலம் சீரழிக்கும் கலாசாரத்திற்கு மட்டும் இன்னும் முடிவுகட்டப்படவில்லை.
சென்னையிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அரசு அலுவலகங்களின் சுவர்கள், பஸ் நிறுத்தங்கள், பாலங்கள், அவ்வளவு ஏன்? பள்ளிக்கூட சுவர்களைக் கூட விட்டுவைக்காமல் அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை எழுதுதல், சுவரொட்டிகளை ஒட்டுதல் என பொது இடங்களின் அழகைக் கெடுக்கும் செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர்.
தமிழக அரசால் தடுக்க முடியவில்லையா?
கட்சிகளுடன் போட்டிபோடும் வகையில், திரைத்துறை சார்ந்த விளம்பரங்களும், சுவரொட்டிகளும் பொது இடங்களை அருவருக்கத் தக்கவையாகவும், பெண்களை முகம் சுழிக்க வைப்பவையாகவும் மாற்றிக் கொண்டிருக்கின்றன.
தமிழ்நாடு அரசும், மற்ற அமைப்புகளும் நினைத்தால், இத்தகைய சட்டவிரோத விளம்பரங்களைத் தடுக்க முடியும். தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள காலத்தில் இத்தகைய விளம்பரங்கள் அனைத்தையும் தடை செய்யும் தமிழ்நாட்டு அரசால் மற்ற தருணங்களில் இத்தகைய விளம்பரங்களை தடுக்க முடியவில்லை என்பதை நம்ப முடியவில்லை.
நீதிமன்றம் மூலம் நடவடிக்கை
சாலைகளின் அழகையும், அரசு கட்டிடங்களின் அழகையும் பாதுகாக்க வேண்டியது அரசு மற்றும் அரசுத் துறைகளின் கடமையும், பொறுப்பும் ஆகும். அதை உணர்ந்து தமிழ்நாட்டில் தேசிய, மாநில நெடுஞ்சாலை பாலங்கள், பொதுப்பணித்துறை, வருவாய்த் துறை, கல்வித்துறைகளுக்கு சொந்தமான கட்டிடங்களில் சட்டவிரோதமாக எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அனைத்தையும் தமிழக அரசு, தமிழக அரசுத் துறைகள், ரெயில்வே துறை, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உடனடியாக அழித்துவிட்டு, அந்த இடங்களை அழகுபடுத்த வேண்டும்.
இல்லாவிட்டால், பொது இடங்களைக் கெடுக்கும் விளம்பரங்களை அகற்ற நீதிமன்றங்கள் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்பதை தங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.