பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாமில் 279 மனுக்களுக்கு உடனடி தீர்வு
வேலூர் மாவட்டத்தில் நடந்த பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாமில் பெறப்பட்ட 281 மனுக்களில் 279 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் நடந்த பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாமில் பெறப்பட்ட 281 மனுக்களில் 279 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறைதீர்வு முகாம்
பொது வினியோக திட்டத்தின் சேவைகள் அனைத்து மக்களுக்கும் வழங்கும் பொருட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா வாரியாக பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நேற்று நடைபெற்றது.
அதன்படி வேலூர் நெல்வாய் கிராமத்தில் நடந்த சிறப்பு குறைதீர்வு முகாமிற்கு வேலூர் வட்ட வழங்கல் அலுவலர் நெடுமாறன் தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார்.
முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டைக்கு மனு செய்தல், செல்போன் எண் பதிவு செய்தல், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் என்று 35 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று வட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்தார்.
279 மனுக்களுக்கு உடனடி தீர்வு
இதேபோன்று காட்பாடி தாலுகா மேல்பாடி அருகே உள்ள கே.ஆர்.நகரில் நடந்த முகாமில் 51 மனுக்களும், அணைக்கட்டு தாலுகா குருமலையில் நடந்த முகாமில் 66 மனுக்களும், குடியாத்தம் தாலுகா சைனகுண்டாவில் நடந்த முகாமில் 47 மனுக்களும், கே.வி.குப்பம் தாலுகா பனமடங்கியில் நடந்த முகாமில் 40 மனுக்களும், பேரணாம்பட்டு தாலுகா குண்டலப்பள்ளியில் நடந்த முகாமில் 42 மனுக்களும் என்று மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் நடந்த பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாமில் 281 மனுக்கள் பெறப்பட்டன.
அவற்றில் 279 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டன. 2 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. அவற்றின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. முகாமில் அதிகபட்சமாக 97 பேர் தங்களின் செல்போன் எண்ணை மாற்றவும், 70 பேர் குடும்ப அட்டையில் பெயர் சேர்க்கவும், 53 பேர் குடும்ப தலைவர் பெயர் மாற்றவும் மனு அளித்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.