சிறப்பு குறைதீர்வு முகாமில் 331 மனுக்களுக்கு உடனடி தீர்வு
வேலூர் மாவட்டத்தில் நடந்த பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாமில் பெறப்பட்ட 339 மனுக்களில் 331 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் நடந்த பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாமில் பெறப்பட்ட 339 மனுக்களில் 331 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறைதீர்வு முகாம்
பொது வினியோக திட்டத்தின் சேவைகள் அனைத்து மக்களுக்கும் வழங்கும் பொருட்டு வேலூர் மாவட்டத்தில் தாலுகா வாரியாக மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெற்று வருகிறது.
அதன்படி இந்த மாதத்துக்கான சிறப்பு குறைதீர்வு முகாம் இன்று வேலூர் தாலுகாவில் சிங்கிரிகோவில் கிராமத்திலும், அணைக்கட்டு தாலுகாவில் மேல்பள்ளிப்பட்டு கிராமத்திலும், காட்பாடி தாலுகாவில் உள்ளிப்புதூர் கிராமத்திலும், குடியாத்தம் தாலுகாவில் கீழ்பட்டி கிராமத்திலும், கே.வி.குப்பம் தாலுகாவில் காங்குப்பம் கிராமத்திலும், பேரணாம்பட்டு தாலுகாவில் நலங்கநல்லூரிலும் நடந்தது.
331 மனுக்களுக்கு உடனடி தீர்வு
6 கிராமங்களில் நடந்த சிறப்பு குறைதீர்வு முகாம்களில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம், குடும்ப தலைவர் பெயர் மாற்றம், ரேஷன் கார்டு நகல் பெற வேண்டி விண்ணப்பம் என்று மொத்தம் 339 மனுக்கள் பெறப்பட்டன.
அவற்றில் 331 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டன. 8 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. அவற்றின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
முகாமில் 112 பேர் தங்களின் குடும்ப அட்டையில் பெயர் சேர்க்கவும், 88 பேர் செல்போன் எண்ணை மாற்றவும், 51 பேர் குடும்ப தலைவர் பெயர் மாற்றவும் மனு அளித்தனர் என்று மாவட்ட உணவுப்பொருள் வழங்கல்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.