திருநங்கைகளின் அடிப்படை கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு
திருநங்கைகளின் அடிப்படை கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்று கலெக்டர் பழனி உறுதியளித்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கி, திருநங்கைகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இக்கூட்டத்தில் திருநங்கைகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:-
கோரிக்கைகள்
எங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய அரசு உதவி செய்ய வேண்டும். எங்களில் நிறைய பேருக்கு மாதாந்திர உதவித்தொகை வராமல் உள்ளது. அவற்றை தவறாமல் வழங்க வேண்டும். அய்யங்கோவில்பட்டில் நாங்கள் வசித்து வரும் குடியிருப்புகள் கட்டப்பட்டு 20 ஆண்டுகள் ஆகிறது. மிகவும் சேதமடைந்த நிலையில் இருப்பதால் எங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும். அதுபோல் மின்சார வசதி, சாலை வசதி, கைப்பம்பு வசதி செய்துதர வேண்டும். காணையில் 20 பேருக்கு வீட்டுமனை வழங்க இடம் தேர்வு செய்தனர். அங்கு உள்ளூர் பிரச்சினை இருப்பதால் எங்களுக்கு அந்த இடத்திற்கு பதிலாக மாற்று இடம் வழங்க வேண்டும்.
அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை
மரக்காணத்தில் 8 பேர் உள்ளோம். வீட்டுமனை கேட்டு 2 முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. நாங்கள் குடிசைத்தொழில் செய்ய அரசு உதவி செய்தால் பயனுள்ளதாக இருக்கும். செஞ்சியில் மேல்மலையனூர் செல்லும் சாலையில் 15 பேருக்கு மனைப்பட்டா வழங்கினார்கள். ஆனால் செஞ்சி நகர் பகுதிக்குள் வழங்க வேண்டும். திருநங்கைகளில் படித்தவர்கள் நிறையபேர் உள்ளனர். அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். நலவாரிய அட்டையில் தந்தை பெயர் இருந்தால்தான் ஆதார் திருத்தம் செய்ய முடியும் என்கிறார்கள். ஆனால் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலவாரிய அட்டைகளில் தந்தை பெயர் இல்லை. எனவே ஆதார் திருத்தம் செய்ய உரிய வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதை கேட்டறிந்த மாவட்ட கலெக்டர் சி.பழனி பேசியதாவது:-
தீர்வு காணப்படும்
திருநங்கைகளின் பெரும்பாலான கோரிக்கையாக இருப்பது சுயமாக சுயதொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய வங்கிக்கடனுதவி, மாதாந்திர ஓய்வூதியத்தொகை, மருத்துவ காப்பீடு அட்டை, இலவச வீட்டுமனைப்பட்டா, பசுமை வீடு போன்ற பல்வேறு கோரிக்கைகளாகும். எனவே திருநங்கைகள் தங்கள் அடிப்படை தேவைகளை கோரிக்கை மனுக்களாக வழங்கினால் உடனடியாக தீர்வு காணப்பட்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட சமூகநல அலுவலர் ராஜம்மாள், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பொன்னம்பலம், கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜானகி, திருநங்கையர் கூட்டமைப்பு தலைவி விமலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.