ஓமலூரில் முதல்-அமைச்சரிடம் மனு அளித்த 4 பேருக்கு உடனடி நலத்திட்ட உதவிகள்
ஓமலூரில் முதல்-அமைச்சரிடம் மனு அளித்த 4 பேருக்கு உடனடியாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென ஆய்வு செய்தார். அப்போது, அவர் அங்கிருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி, காலையில் முதல்-அமைச்சரிடம் மனுக்களை வழங்கிய 4 பேருக்கும் உடனடியாக நலத்திட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, செல்லப்பிள்ளைகுட்டையை சேர்ந்த ராஜம்மாளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்த முரளிதரனுக்கு கிராம நத்தம் கூட்டு பட்டா மாறுதல் ஆணை, திண்டமங்கலத்தை சேர்ந்த கோமதிக்கு இலவச தையல் எந்திரம், செல்லப்பிள்ளைகுட்டையை சேர்ந்த சித்ராவுக்கு கணவரால் கைவிடப்பட்டவர் உதவித்தொகை ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார். அப்போது, மனுக்கள் மீது உடனடி தீர்வு கண்ட முதல்-அமைச்சருக்கு அவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.