12 மணி நேர பணிச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்- டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


12 மணி நேர பணிச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்- டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x

தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் எந்த சட்டமும் தமிழகத்தில் இருக்கக்கூடாது என்றும், 12 மணி நேர பணிச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் எந்த சட்டமும் தமிழகத்தில் இருக்கக்கூடாது என்றும், 12 மணி நேர பணிச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் தொழிலாளர்களை 12 மணி நேரம் பணி செய்ய வகை செய்யும் தொழிற்சாலைகள் சட்டத்திருத்த மசோதாவை தமிழக சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் உரிமைகளையும், நலன்களையும் பறித்து, அவர்களை கொத்தடிமைகளாக்கும் இந்த சட்டத் திருத்தம் தவறானது, ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஒரு நாளைக்கு 12 மணி நேரச் சட்டம் அனைத்துத் தொழிற்சாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படாது, விருப்பமுள்ள தொழிலாளர்கள் மட்டும் 12 மணி நேர பணி முறையை ஏற்றுக் கொள்ளலாம் என்றும், இந்த சட்டத்தை செயல்படுத்துவதற்காக உயர்நிலைக்குழு அமைக்கப்படும் என்றும் தமிழக அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன?

இந்த விளக்கங்களும், விதிகளும் ஏட்டுச் சுரைக்காயாக மட்டுமே இருக்கும். காலப்போக்கில் அனைத்து பணியாளர்களும் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என வாரத்திற்கு 6 நாட்கள் பணி செய்யும்படி கட்டாயப்படுத்தப்படுவார்கள். அதற்காக அவர்களுக்கு கூடுதல் ஊதியம் எதுவும் வழங்கப்படாது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து கொத்தடிமைகளாக்குவது தான் இந்த சட்டத்திருத்தத்தின் விளைவாக இருக்கும்.

தமிழ்நாட்டில் இயற்றப்பட்டுள்ள 12 மணி நேரச் சட்டம் என்பது உழைக்கும் வர்க்கத்திற்கு கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட உடல் மற்றும் மனநலன் சார்ந்த பாதிப்புகளை அடுத்தக்கட்டத்திற்கு அழைத்துச் செல்லும். மொத்தத்தில் இந்த சட்டம் தொழிலாளர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும். மத்திய அரசின் கொள்கைகளை எதிர்ப்பதாகக் கூறிக் கொள்ளும் தமிழ்நாட்டில் இந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய தேவை என்ன?.

தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் எந்த சட்டமும் தமிழகத்தில் இருக்கக்கூடாது. இதை உணர்ந்து 12 மணி நேர பணிச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story