காட்டு அய்யனார், பிடாரியம்மன் கோவில்களில் குடமுழுக்கு
குத்தாலம் அருகே இராஜகோபாலபுரத்தில் காட்டு அய்யனார், பிடாரியம்மன் கோவில்களில் குடமுழுக்கு நடந்தது
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே இராஜகோபாலபுரத்தில் பிரசித்தி பெற்ற தர்மசாஸ்தா என்கிற காட்டு அய்யனார் மற்றும் பிடாரி அம்மன் கோவில்கள் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவில் சோழ சாம்ராஜ்ய தெய்வமாகிய அடியார்களுக்கு வேண்டும் வரங்களை தரக்கூடியதாக விளங்குகிறது. இந்த கோவிலின் குடமுழுக்கு விழா கடந்த 6-ந் தேதி விக்னேஸ்வர பூஜை , கணபதி ஹோமம் , கோபூஜை உள்ளிட்டவற்றுடன் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நேற்று காலை 6 கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று மகாபூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து தர்மசாஸ்தா , மதுரை வீரன் , நொண்டி வீரன் உள்ளிட்ட சாமிகளுக்கு மூலஸ்தான குடமுழுக்கு நடந்தது. தொடர்ந்து பிடாரியம்மன் கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. பின்னர் சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.