நோய்எதிர்ப்பு சக்தி மருந்துகளை தேவைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும்: அரசு ஆஸ்பத்திரி டீன் சிவக்குமார் அறிவுறுத்தல்


நோய்எதிர்ப்பு சக்தி மருந்துகளை  தேவைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும்:  அரசு ஆஸ்பத்திரி டீன் சிவக்குமார் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 25 Nov 2022 12:15 AM IST (Updated: 25 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நோய்எதிர்ப்பு சக்தி மருந்துகளை தேவைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும் என்று அரசு ஆஸ்பத்திரி டீன் சிவக்குமார் அறிவுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி

பொதுமக்கள் நுண்ணுயிரியல்துறை பரிந்துரைப்படி நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை தேவைக்கு ஏற்ப மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீன் சிவக்குமார் அறிவுறுத்தி உள்ளார்.

நுண்ணுயிர் எதிர்ப்பு வாரம்

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை உலக நுண்ணுயிர் எதிர்ப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதில் நுண்ணுயிர்கள் குறித்தும், நோய்எதிர்ப்பு சக்தி மருந்துகள் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி நுண்ணுயிரியல் துறை சார்பில் உலக நுண்ணுயிர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்கள், மாணவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களிடம் நுண்ணுயிர்கள் பற்றியும், மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் எடுக்கக்கூடாது என்பது பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தேவைக்கு ஏற்ப..

தொடர்ந்து ஆஸ்பத்திரி கூட்ட அரங்கத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் சிவக்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது, 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பென்சிலின் என்ற முதல் நோய் எதிர்ப்பு சக்தி(ஆன்டிபயாடிக்) மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது ஏராளமான நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. ஆனாலும், நுண் கிருமிகளும் புதிது புதிதாக உருவாகிக்கொண்டே வருகின்றன. தற்போதைய நிலையில் மருந்துகளை எதிர்த்து நிற்கும் அளவுக்கு கிருமிகளும் தங்களை மாற்றி கொண்டுள்ளன. எனவே, தற்போதைய சூழ்நிலையில் நம்மிடம் இன்றைய காலக்கட்டத்துக்கு ஏற்ற புதிய மருந்துகள் இல்லை. இது தொடர்பாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தி நடைமுறைக்கு ஏற்ப நெறிமுறைப்படுத்த வேண்டும். பொதுமக்கள் தேவைக்கு ஏற்ப, சரியான நேரத்தில் மருந்துகளை பயன்படுத்தினால் நோய்களை குணப்படுத்தி உயிரிழப்புகளை தடுக்க முடியும். இதில், நுண்ணுயிரியல் துறை சார்பில் அளிக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்' என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியை முன்னிட்டு மருத்துவ மற்றும் செவிலியர் மாணவ, மாணவியருக்கு கட்டுரைப் போட்டி, ரங்கோலி, வினாடி வினா போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, துணை மருத்துவ கண்காணிப்பாளர் குமரன், நுண்ணியிரியல் துறை தலைவர் ஜெயமுருகன், மனநல மருத்துவ பிரிவு தலைவர் அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story