விருத்தாசலம் பகுதியில்களிமண் தட்டுப்பாட்டால் பொங்கல் பானை உற்பத்தி பாதிப்புமண்பாண்ட தொழிலாளர்கள் கவலை


விருத்தாசலம் பகுதியில்களிமண் தட்டுப்பாட்டால் பொங்கல் பானை உற்பத்தி பாதிப்புமண்பாண்ட தொழிலாளர்கள் கவலை
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-12T00:16:03+05:30)

விருத்தாசலம் பகுதியில் களிமண் தட்டுப்பாட்டால் பொங்கல் பானை உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு மண்பாண்ட தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனா்.

கடலூர்


இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பொங்கல் பண்டிகை. இந்த பண்டிகையையொட்டி மண்பானைகளில் பொங்கலிடுவது தமிழர்களின் மரபு. தற்போது வளர்ந்துவரும் நவீன காலத்தில் கிராமப்புறங்களை விட நகரப்புறங்களில் மண்பானை, தீபம் போன்ற களிமண்ணால் செய்யப்பட்ட பொருட்களை மக்கள் அதிகம் வாங்க ஆரம்பித்துள்ளனர்.

புத்துயிர் பெற்ற தொழில்

இதனால் அழிந்து வந்த மண்பாண்ட தொழில், தற்போது புத்துயிர் பெற்றுள்ளது. அதற்கு உதாரணமாக சக்கரத்தில் வைத்து பானைகள் செய்யும் காலம் மாறி, தற்போது தனி எந்திரமே பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.இந்த தொழிலுக்கு மூலப்பொருளாக இருப்பது களிமண். இந்நிலையில் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் வேலையில் களிமண் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மண்பாண்ட தொழிலாளர்கள் பானைகள் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.தற்போது பொங்கல் பண்டிகைக்கு மண் பானைகளுக்கு போதிய வரவேற்பு இருந்தும், களிமண் தட்டுப்பாட்டால் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டுள்ள மண் பாண்ட தொழிலாளர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

உற்பத்தி பாதியாக குறைவு

விருத்தாசலம் அடுத்த கொடுக்கூரை சேர்ந்த சங்கீதா:-

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கட்சிபெருமாநத்தம் பகுதியில் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்பிறகு மண் எடுக்க அனுமதி கிடைக்கவில்லை. இதனால் மண்பாண்ட பொருட்கள் தயாரிக்க தேவையான களிமண் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொங்கலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளதால், இனி பானைகள் செய்வது கடினம். கடந்த ஆண்டை விட மண் பானை உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது. ஏரி, குளங்களில் இருந்து கிடைக்கிற மண்ணை வைத்து தொழிலை நடத்தி வருகின்றோம்.

தற்போது செய்யப்பட்டுள்ள பானைகள் ஒன்று ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தை மாதத்திற்கு பிறகு கோவில் திருவிழாக்கள் வருவதால், பொம்மைகள் தயாரிக்க மண் தேவைப்படும். அதனால் தமிழக அரசும், கடலூர் மாவட்ட கலெக்டரும் கட்சிபெருமாநத்தம் பகுதியில் மண் அள்ள அனுமதிக்க வேண்டும் என்றார்.

நீண்ட நாட்கள் வாழ மண்பானை சமையல்

மண்பாண்ட தொழிலாளி ராகவன்:-

மக்கள் அனைவருமே அலுமினியம், பிளாஸ்டிக், எவர்சில்வர் பாத்திரங்களை பயன்படுத்த தொடங்கியதால் இந்த மண்பாண்டங்களின் அருமை தெரியவில்லை. கியாஸ் சிலிண்டர், மின்சார அடுப்பு ஆகியவற்றிற்கு மக்கள் மாறிவிட்டதால் இந்த தொழில் நலிவடைந்து வருகிறது.

மண்பாண்டங்களை பயன்படுத்தி சமைத்து பாருங்கள், அந்த உணவு நறுமணமாக ஆரோக்கியமாக இருக்கும். மண் பாத்திரங்களை நீங்கள் பயன்படுத்தும் போது உடல் சூடு தணியும், பித்தம் குறையும், மூல நோய்கள் வராது. இயற்கை உணவுக்கு மாறுவது முக்கியமல்ல, அதனை இயற்கையான மண்பாண்டங்களில் சமைத்து உண்பது தான் முக்கியம்.

வெளிநாடுகளில் மண்பாண்டங்களில் விற்கப்படும் பழைய சாதத்திற்கு விலை அதிகம். ஆனால் இங்கு இருக்கும் மக்களுக்கு மண்பாண்ட சமையலின் அருமை தெரியவில்லை. தற்போது களிமண் தட்டுப்பாட்டால் பொங்கல் பண்டிகைக்கு தேவையான மண் பானைகள் செய்ய முடியாமல் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது.

அதனால் எங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அரசு சலுகைகள் வழங்க வேண்டும். மண்பாண்ட பாத்திர கண்காட்சி நடத்தி மண்பாண்ட தொழிலை ஊக்குவிக்க வேண்டும் என்றார்.


Next Story