ரப்பர் பால் வடிக்கும் தொழில் பாதிப்பு
பேச்சிப்பாறை அணை பகுதிகளில் நேற்று 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. தொடர் மழையால் ரப்பல் பால் வடிக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
குலசேகரம்,
பேச்சிப்பாறை அணை பகுதிகளில் நேற்று 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. தொடர் மழையால் ரப்பல் பால் வடிக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
பலத்த மழை
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணைக்கு நீர் வரும் மேல் கோதையாறு, மாங்காமலை, குற்றியாறு, மோதிரமலை, தோட்டமலை உள்ளிட்ட மலைப் பகுதிகளில் நேற்று பிற்பகல் 1 மணி முதல் 4 மணி வரை பலத்த மழை பெய்தது. இதே போன்று அணையின் கீழ் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. அதே வேளையில் பெருஞ்சாணி அணை பகுதி, குலசேகரம் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழையாக இருந்தது.
இதேபோல் கன்னியாகுமரி, கொட்டாரம், தோவாளை உள்ளிட்ட சில இடங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
ரப்பர் தொழில் பாதிப்பு
குமரி மாவட்டத்தில் திருவட்டார், கல்குளம், விளவங்கோடு, தோவாளை ஆகிய தாலுகாக்களில் பிரதான வேளாண் சார்ந்த தொழிலாக ரப்பர் தோட்டத் தொழில் உள்ள நிலையில் தற்போது தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ரப்பர் தோட்டங்களில் பால்வடிப்பு முடங்கி வருகிறது.
பெரும்பாலான ரப்பர் தோட்டங்களில் ரப்பர் மரங்களில் மழை நாட்களில் பால்வடிப்பு செய்யும் வகையில் மழை நீர் தடுப்பு குடைகள் கட்டப்பட்டுள்ள போதிலும் பலத்த மழை காரணமாக மழை நீர் தடுப்பு குடைகளை மீறியும் ரப்பர் மரங்களில் பால்வடிக்கும் பகுதிகள் நனைந்து விடுகின்றன. இதனால் பால்வடிக்க முடியாத நிலை ஏற்பட்டு ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பால் வடிப்பு தொழிலாளர்களும் வேலையிழந்து வருகின்றனர்.
விலையும் சரிவு
மேலும் ரப்பர் விலையிலும் சரிவு ஏற்பட்டதால் ரப்பர் விவசாயிகளை கூடுதலாக கவலை அடைய செய்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி கோட்டயம் சந்தையில் ரப்பர் வியாபாரிகள் விலையாக ஆர்.எஸ்.எஸ். 4 தர ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ.143.50ஆகவும், ஆர்.எஸ்.எஸ். 5 தர ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ.140 ஆகவும், ஐ.எஸ்.எஸ். தர ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ.129 ஆகவும், 80 சதவீதம் ஒட்டுப்பாலின் விலை கிலோவிற்கு ரூ.82 ஆகவும் இருந்தது.