முருங்கைகாய் விளைச்சல் பாதிப்பு
உடன்குடி பகுதியில் முருங்கைகாய் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
உடன்குடி:
உடன்குடி பகுதியில் முருங்கைக்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதுடன், விலையும் வீழ்ச்சி அடைந்து இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
முருங்கை விவசாயம்
உடன்குடி வட்டார பகுதியில் முன்பு தென்னை, பனை பயிர்களுக்கு இடையே முருங்கை பயிர்கள் நடவு செய்யப்பட்டு வந்தது. பின்னர் படிப்படியாக முருங்கை பயிர்கள் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டது. தற்போது இப்பகுதியில் முருங்கை விவசாயம் முழு முயற்சியுடன் நடைபெறுகிறது. திரும்பிய பக்கம் எல்லாம் முருங்கை பயிர்கள் காட்சி அளிக்கும் சூழல் உள்ளது.
விளைச்சல் பாதிப்பு
முருங்கை பயிர்களில் பூக்கள் நிறைந்து காய் பிடிக்கும் நிலையில் இருந்தன. ஆனால் கடந்த சில நாட்களாக அடிக்கடி குளிர்ந்த காற்று வீசுவதுடன், தீடீரென்று காற்றுடன் சாரல் மழை பெய்து வருவதாலும் பெரும்பாலான முருங்கை பூக்கள் செடிகளில் இருந்து உதிர்ந்து வீணாகி வருகின்றன. இதனால் இப்பகுதியில் முருங்கைக்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அதேசமயம் செடிகளில் மிஞ்சும் சில முருங்கைக்காய்களுக்கும் போதிய விலை கிடைக்கவில்லை.
விலை வீழ்ச்சி
அதாவது முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.15-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். கடந்த ஆண்டு இதேமாதம் முருங்கைக்காய் கிலோவுக்கு ரூ.25 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் விளைச்சலும் பாதிக்கப்பட்டதுடன், போதியவிலை கிடைக்காததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, முருங்கை விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.