கழிவுநீரால் பொதுமக்களுக்கு பாதிப்பு: எரிசாராய தொழிற்சாலையில் அதிகாரிகள் ஆய்வு
கழிவுநீரால் பொதுமக்களுக்கு பாதிப்பு: எரிசாராய தொழிற்சாலையில் அதிகாரிகள் ஆய்வு
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி அருகே உள்ள சின்னபுலியூரில் தனியார் எரிசாராய தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து வெளியேறும் கழிவு நீரால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், ஆலையில் இருந்து வெளியேறும் புகை மற்றும் சாம்பலால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளித்திருந்தார்கள்.
இதையடுத்து கோபி ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்சினி தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகளும், மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் உதயகுமார் தலைமையில் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் எரிசாராய ஆலையில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது ஆலையின் முன்பு நூற்றுக்கணக்கான விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆய்வை முடித்து வெளியே வந்த அதிகாரிகளிடம் விவசாயிகளும், பொதுமக்களும், கழிவு நீர் கலந்துள்ள குடிநீரையும், ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் சாம்பல் குவித்து வைக்கப்பட்டுள்ள ஆதாரங்களையும் வழங்கினார்கள்.
அவர்களிடம் கோபி ஆர்.டி.ஓ. திவ்யபிரியதர்சினி, ஆலையில் உள்ள தண்ணீர், கழிவு நீர் மாதிரிகளை சேகரித்துள்ளோம். அவைகளை ஆய்வகத்திற்கு அனுப்பி வைப்போம். அதன் முடிவை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.