கவனக்குறைவாக செயல்படுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை-மருத்துவ கல்வி இயக்குனர் எச்சரிக்கை
கவனக்குறைவாக செயல்படுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவ கல்வி இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அடுக்கம்பாறை
கவனக்குறைவாக செயல்படுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவ கல்வி இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 45), லாரி டிரைவர். இவர் கடந்த 5-ந் தேதி லாரியில் ஆம்பூரில் இருந்து வேலூர் நோக்கி வந்தார். அப்போது பின்னால் வந்த தனியார் பஸ் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த கார்த்தியேன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தலை மற்றும் தாடையில் தையல் போடப்பட்டது. பின்னர் அவரது உறவினர்கள் கார்த்திகேயனை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு கார்த்திகேயனுக்கு எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதில் தலையில் இரும்பு நட்டை அகற்றாமல் தையல் போட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் தலையில் இருந்த நட்டு அகற்றப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மருத்துவக் கல்வி இயக்குனர் சாந்திமலர், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து டீன் உள்ளிட்ட டாக்டர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் தலையில் சிக்கிய நட்டை அகற்றாமல் தையல் போடப்பட்ட சம்பவம் தொடர்பாக டீன் உள்ளிட்ட டாக்டர்களிடம் அவர் விசாரணை மேற்கொண்டார். அப்போது இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும் எனவும், எப்போதும் கவனமாக பணியாற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார். மேலும் இனிமேல் இதுபோன்று கவனக்குறைவோடு செயல்படுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.