போக்குவரத்துக்கு இடையூறாகசாலைகளில் வைக்கப்படும் விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும்பொதுமக்கள் கோரிக்கை
போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் வைக்கப்படும் விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஈரோடு மாநகர் பகுதியில் சாலை விரிவாக்கம் மற்றும் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பஸ் நிலையம் அருகே சுவஸ்திக் கார்னர் பகுதியில் சாலைகள் விரிவாக்கம், புதிய ரவுண்டானா அமைப்பு பணிகள் நடக்கின்றன. ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபாதையுடன் கூடிய சாலை விரிவாக்கப்பணி பாதி அளவில் நடந்து உள்ளது.
இந்த நிலையில் சுவஸ்திக் கார்னர் பகுதியை ஒட்டி உள்ள கடைகளில் வியாபாரத்துக்காக விளம்பர பலகைகளை ரோட்டில் வைக்கிறார்கள். ஏற்கனவே நடைபாதைக்காக கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு சாலையில் பெரும் அளவு மேடாக்கப்பட்டு உள்ளது. அதில் விளம்பர பலகைகள் வைத்து சாலையை ஆக்கிரமிப்பு செய்வதால், கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், பணி செய்பவர்களின் வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.