அரசு பள்ளிகளில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை
ராணுவ பள்ளியில் உள்ள சிறப்பு அம்சங்களை அரசு பள்ளிகளில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
வெலிங்டன்,
ராணுவ பள்ளியில் உள்ள சிறப்பு அம்சங்களை அரசு பள்ளிகளில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
பயிற்சி முகாம்
நீலகிரி மாவட்டம் குன்னூரில் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் 3 நாள் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. இதனை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரும், சாரண சாரணியர் இயக்க மாநில தலைவருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
விழாவில் சாரண, சாரணியர் இயக்கத்தின் உடை அணிந்து வந்த அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேசியக்கொடி மற்றும் சாரண, சாரணியர் இயக்க கொடியை ஏற்றி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
சிறப்பு அம்சங்கள்
கல்வியைப்போல் ஒழுக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தால்தான் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். நீலகிரி மாவட்டத்திற்கு எப்போது வந்தாலும் ராணுவ பள்ளிக்கு வர வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதற்கு முன்பு முதல்-அமைச்சருடன் வந்தேன். தற்போது தனியாக வந்து உள்ளேன். ராணுவ பள்ளியில் உள்ள மூலிகை பூங்கா, பாரம்பரிய பழைய கட்டிடத்தில் சிறிய இடத்தில் உள்ள ஆய்வகம் நன்றாக உள்ளது. ராணுவம் என்றாலே ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு இருக்கும்.
ராணுவ பள்ளிகளில் மாணவர்களை உடல் மற்றும் மனதளவில் தயார்படுத்தும் பணிகளை ஆசியர்கள் சிறப்பாக செய்கின்றனர். ராணுவ பள்ளியில் உள்ள சிறப்பு அம்சங்களை, தமிழக அரசு பள்ளியில் சோதனை அடிப்படையில் பின்பற்றி, அந்த திட்டம் வெற்றி அடைந்தால் அதை தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும்.
ஆண்டுதோறும் முகாம்கள்
இனிவரும் காலங்களில் ஆண்டுதோறும் இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படும். இனிவரும் ஆண்டுகளில் சாரண சாரணியர் இயக்க செயல்பாடுகளுக்கும் தனி நிதி ஒதுக்கப்படும். 3 நாட்கள் நடக்கும் இந்த முகாமை நல்ல முறையில் பயனபடுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முகாமில் மண்டல அளவில் 6 மாவட்டங்களை சேர்ந்த 300 சாரண சாரணியர்கள், 100 ஆசிரியர்கள், 50 அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ராணுவ பள்ளிக்கு சென்று பார்வையிட்டார்.
அதன் பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறும்போது,
தமிழகத்தில் பல்வேறு மலை கிராம பகுதிகளில் வசிக்கும் பள்ளி மாணவ,-மாணவிகளின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அரசின் எண்ணும் எழுத்தும் திட்டம் போல், குன்னூர் ராணுவ பள்ளியிலும் பல திட்டங்கள் உள்ளன. பள்ளியின் சார்பில் பல கோரிக்கைகளை வைத்து உள்ளனர். இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
ஆய்வின் போது கலெக்டர் அம்ரித், முதன்மை கல்வி அலுவலர் தாமோதரன், ராணுவ பப்ளிக் பள்ளி தலைவர் பிரிகேடியர் அனுராக் பரத்வாஜ், முதல்வர் ஹேமா டிபிராங்க் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.