இறக்குமதி வரி அதிகரிப்பு எதிரொலி: தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.856 உயர்வு


இறக்குமதி வரி அதிகரிப்பு எதிரொலி: தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.856 உயர்வு
x

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்ததன் காரணமாக, அதன் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.856 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.38 ஆயிரத்து 280-க்கு விற்பனை ஆனது.

சென்னை,

தங்கம் விலை கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதிலும் கடந்த மாதம் 28, 29 மற்றும் 30-ந் தேதிகளில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வந்தது. அந்த 3 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.97-ம், பவுனுக்கு ரூ.776-ம் குறைந்திருந்தது. இந்த நிலையில் நேற்று திடீரென்று தங்கம் விலை உயர்ந்து காணப்பட்டது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 678-க்கும், ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 424-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.107-ம், பவுனுக்கு ரூ.856-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 785-க்கும், ஒரு பவுன் ரூ.38 ஆயிரத்து 280-க்கும் விற்பனை ஆனது.

காரணம் என்ன?

பொதுவாக தங்கம் விலையில் எப்படி மாற்றம் இருக்கிறதோ? அப்படி தான் வெள்ளி விலையிலும் மாற்றம் இருக்கும். ஆனால் நேற்று தங்கம் விலை அதிகரித்து இருந்த நிலையில், வெள்ளி விலை குறைந்து இருந்ததை பார்க்க முடிந்தது. அதன்படி, நேற்று கிராமுக்கு 10 காசும், கிலோவுக்கு ரூ.100-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.65-க்கும், ஒரு கிலோ ரூ.65 ஆயிரத்துக்கும் வெள்ளி விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை திடீர் உயர்வுக்கு காரணம் குறித்து சென்னை வைரம் மற்றும் தங்க வியாபாரிகள் சங்க செயலாளர் சாந்தகுமாரிடம் கேட்டப்போது, 'தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை ஏற்கனவே இருந்ததில் இருந்து 5 சதவீதத்தை மத்திய அரசு அதிகரித்து இருக்கிறது. மேலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இனி வரக்கூடிய நாட்களில் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடனேயே நீடிக்கும்' என்றார்.


Next Story