போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல்
பள்ளிகொண்டா-குடியாத்தம் சாலையில் பேக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனபோலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிகொண்டா-குடியாத்தம் சாலையில் பேக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனபோலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து பாதிப்பு
பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை மழை நீர் கால்வாய் கட்டும் பணி கடந்த 4 மாதமாக நடைபெற்று வருகிறது. ஒரே நேரத்தில் சாலையின் இருபுறமும் பணி செய்ய ஒப்பந்ததாரர்கள் பள்ளம் தோண்டினர். இதனால் போக்குவரத்திற்கு தீர்வு காணும் வகையில் ஆந்திராவில் இருந்து பள்ளிகொண்டா வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் செல்ல கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் இதை சில நேரங்களில் வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்காமல் கனரக வாகனங்கள் அந்த வழியாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கால்வாய் கட்டும் ஒப்பந்ததாரர் வேகமாக பணி செய்தாலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இதனால் அனைத்து தரப்பினரும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்படும்
இந்த நிலையில் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரன் நேற்று பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலையில் உள்ள கடை வியாபாரிகளிடம் நேரடியாக சென்று கடைக்கு வரும் பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் அந்த வாகனங்களை பறிமுதல் செய்வதோடு கடை உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
குடியாத்தம் சாலையில் பார்க்கிங் வசதி இல்லாமலேயே ஜவுளிக்கடை, மருந்து கடை, சூப்பர் மார்க்கெட் மற்றும் வீடு கட்டும் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை, நகைக்கடை உள்ளிட்ட கடைகளுக்கு சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள் நடு ரோட்டிலேயே நின்று சரக்குகளை இறக்குவதால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
ஆகவே சரக்கை இறக்கும் லாரிகள் பகல் நேரத்தில் இறக்காமல் இரவு நேரத்தில் இறக்க வேண்டும் என கடை உரிமையாளர்களை கேட்டுக்கொண்டார். அப்படி மீறி சாலையில் நிறுத்தி சரக்குகளை இறக்குவது தெரிய வந்தால் சரக்கு லாரிகளை பறிமுதல் செய்வதோடு கடை உரிமையாளர்களுக்கும் ஆபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.