10 மாதங்களில் 104 பேர் குண்டர் சட்டத்தில் கைது


10 மாதங்களில் 104 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x

வேலூர் மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் 104 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் 104 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குண்டர் சட்டம்

வேலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், அமைதியை நிலைநாட்டவும் மாவட்ட காவல்துறையினர் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, அடி-தடி, மணல் கடத்தல், சாராயம் விற்பனை செய்வது உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைக்கிறார்கள்.

சிறை தண்டனை முடிந்து வெளிவரும் சிலர் மனம் திருந்தி வாழாமல் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையில் கலெக்டரின் உத்தரவின் பேரில் ஓராண்டு வெளியே வர முடியாதபடி குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்கள்.

104 பேர் கைது

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை 10 மாதங்களில் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 104 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இவற்றில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி மற்றும் பொதுஅமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 77 பேரும், சாராயம் காய்ச்சியவர்கள், விற்பனை செய்தவர்கள் 26 பேரும், மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரும் அடங்குவார்கள்.

வேலூர் மாவட்டத்தில் கடந்தாண்டு 113 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு, அமைதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story