தூத்துக்குடியில் 8 மையங்களில் 9,624 பேர் போலீஸ் தேர்வு எழுதினர்
தூத்துக்குடியில் 8 மையங்களில் நடந்த போலீஸ் தேர்வை 9 ஆயிரத்து 624 பேர் எழுதினர். இத்தேர்வு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
தூத்துக்குடியில் 8 மையங்களில் நடந்த போலீஸ் தேர்வை 9 ஆயிரத்து 624 பேர் எழுதினர். இத்தேர்வு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
எழுத்து தேர்வு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை, இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறது. இதற்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 388 ஆண்கள், 2 ஆயிரத்து 249 பெண்கள், 4 திருநங்கைகள் ஆக மொத்தம் 11 ஆயிரத்து 641 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் தேர்வு எழுத வசதியாக மாவட்டத்தில் தூத்துக்குடி பி.எம்.சி மெட்ரிகுலேசன் பள்ளி, கிரேஸ் பொறியியல் கல்லூரி, காமராஜ் கல்லூரி, புனித பிரான்ஸிஸ் சேவியர் மேல்நிலை பள்ளி, புனித தாமஸ் மேல்நிலை பள்ளி, வ.உ.சி கல்லூரி, காரப்பேட்டை நாடார் மேல்நிலைப் பள்ளி மற்றும் சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 8 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.
9,624 பேர் எழுதினர்
நேற்று காலை முதல் தேர்வு மையங்களுக்கு விண்ணப்பதாரர்கள் வந்தனர். அப்போது திடீரென மழை பெய்ததால் விண்ணப்பதாரர்கள் சிறிது சிரமத்துக்கு ஆளானார்கள். தொடர்ந்து நடந்த தேர்வில் 8 மையங்களிலும் மொத்தம் 9 ஆயிரத்து 624 பேர் தேர்வு எழுதினர். 2 ஆயிரத்து 17 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு மையங்களுக்கு முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வர்கள் பலத்த சோதனைக்கு பின்பே மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
சிறப்பு அதிகாரி ஆய்வு
இந்த தேர்வு பணிகளை தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியான சென்னை ரெயில்வே போலீஸ் டி.ஐ.ஜி அபிஷேக் தீக்ஷித், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தார்.