கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற போலீஸ்காரர், மகனுடன் பலி


கோவில்பட்டி அருகே கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற போலீஸ்காரர், மகனுடன் பலியானார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற போலீஸ்காரர் தனது மகனுடன் பலியானார். அவருடைய மனைவி, இன்னொரு மகன் படுகாயம் அடைந்தனர்.

போலீஸ்காரர்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் மகன் ராஜா மார்சல் (வயது 38). இவர் காடல்குடி போலீஸ் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

இவருடைய மனைவி தேவிகா (வயது 30), மகன்கள் ரஷ்வந்த் (வயது 6), ரிஷாந்த் (வயது 4), மகள் ரென்னிஷா (வயது 2). தேவிகா கோவில்பட்டி அடுத்துள்ள தெற்கு திட்டங்குளம் கிராமத்தை சேர்ந்தவர். இவருடைய தாத்தா இறந்த துக்க நிகழ்ச்சிக்கு துணி எடுப்பதற்காக நேற்று முன்தினம் மாலையில் ராஜா மார்சல் தனது மோட்டார் சைக்கிளில் மனைவி குழந்தைகளுடன் கோவில்பட்டிக்கு வந்தார்.

கார் மோதியது

அங்குள்ள ஒரு ஜவுளி கடையில் புது ஜவுளி எடுத்துக்கொண்டு மீண்டும் குடும்பத்தினருடன் மோட்டார் சைக்கிளில் தெற்கு திட்டங்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

கோவில்பட்டி அருகே எட்டயபுரம் ரோட்டில் உள்ள தொழில்பேட்டையை கடந்து செல்லும்போது, எதிரே எட்டயபுரத்தில் இருந்து கோவில்பட்டி நோக்கி வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

போலீஸ்காரர்-மகன் பலி

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு ராஜா மார்சல் உள்பட 4 பேர் பலத்த காயமடைந்தனர். சிறுமி ரென்னிஷா காயமின்றி தப்பினாள். அங்கிருந்தவர்கள் அந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரிஷாந்த் உயிரிழந்தான்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜா மார்சலை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவரும் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

டிரைவர் கைது

மேலும் படுகாயமடைந்த தேவிகா, இன்னொரு மகனான ரஷ்வந்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின்பேரில் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து, விளாத்திகுளம் பூமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கார் டிரைவர் சிவராமச்சந்திரனை (வயது 24) கைது செய்தார். விபத்தில் போலீஸ்காரர் தனது மகனுடன் பலியான சம்பவம் தெற்கு திட்டங்குளம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story