குள்ளஞ்சாவடி அருகே தீ விபத்தில் 4 கூரை வீடுகள் எரிந்து சாம்பல் சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் காயம்
குள்ளஞ்சாவடி அருகே தீ விபத்தில் 4 கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது. மேலும் சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் காயமடைந்தனர்.
குறிஞ்சிப்பாடி,
குள்ளஞ்சாவடி அருகே உள்ள ஆயிக்குப்பம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சுரேஷ்(வயது 35), கூலி தொழிலாளி. இவருடைய கூரை வீடு நேற்று மாலை திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. அப்போது காற்று பலமாக வீசியதால், அருகில் இருந்த ஆறுமுகம் மனைவி ராதா (65), கலியபெருமாள் மனைவி நாகம்மாள் (50), ரமேஷ் மனைவி சரஸ்வதி ஆகியோரின் வீடுகளுக்கும் தீ பரவ தொடங்கியது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்தப்படி வெளியே ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது சுரேஷின் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர், திடீரென வெடித்தது. இதில் அங்கு தீயை அணைத்து கொண்டிருந்த (65), ரமேஷ் மகன் ஆதவன் (11), ராமலிங்கம் மகன் பிரபு (35), ரமேஷ் மனைவி சரஸ்வதி (35) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
போலீசார் விசாரணை
இதில் ராதா மற்றும் ஆதவன் கடலூர் அரசு மருத்துவமனைக்கும், பிரபு, சரஸ்வதி ஆகியோர் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தீ விபத்து பற்றி தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் உத்திராபதி தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் 4 வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சாம்பலானது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இ்ந்த நிலையில் தீ விபத்து பற்றி அறிந்த குறிஞ்சிப்பாடி தாசில்தார் சுரேஷ் குமார் விரைந்து சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி தலா ரூ.5 ஆயிரம் நிவாரண உதவி வழங்கினார். அப்போது ஆயிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணகி பாலகிருஷ்ணன் உடன் இருந்தார்.