மோட்டார் சைக்கிளை நடுரோட்டில் தீவைத்து கொளுத்திய வாலிபர் கடலூரில் பரபரப்பு
கடலூரில் மதுபோதையில் தவறி விழுந்த ஆத்திரத்தில் வாலிபர் மோட்டார் சைக்கிளை நடுரோட்டில் தீவைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மஞ்சக்குப்பம் பாரதி சாலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து கடலூர் நோக்கி வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். மஞ்சக்குப்பம் மாநகராட்சி பூங்கா அருகில் வந்த போது, அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி நடுரோட்டில் விழுந்தார். இதையடுத்து மோட்டார் சைக்கிளை தூக்கி நிறுத்திய போது, அதில் இருந்து பெட்ரோல் வடிந்ததாக தெரிகிறது.
இதை பார்த்து ஆத்திரமடைந்த வாலிபர் திடீரென மோட்டார் சைக்கிளை தீ வைத்து கொளுத்தினார். இதில் தீ கொழுந்து விட்டு மளமளவென பற்றி எரிந்தது. பின்னர் அவர் அங்குள்ள சிறுவர் பூங்கா அருகில் சென்று நின்று உளறிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் நடுரோட்டில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததை பார்க்க அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.
பரபரப்பு
இந்நிலையில் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து சேதமானது. இதற்கிடையே அங்கு வந்த புதுநகர் போலீசார், மோட்டார் சைக்கிளை தீ வைத்து கொளுத்திய வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், நெய்வேலி அருகே மதனகோபாலபுரத்தை சேர்ந்த மேத்யூ (வயது 34) என்பதும், மதுபோதையில் வந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததால், ஆத்திரத்தில் தீ வைத்து கொளுத்தியதும் தெரியவந்தது.
இருப்பினும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.