தட்டார்மடத்தில் செயல்படாத கண்காணிப்பு கேமராவை சீரமைக்க கோரிக்கை
தட்டார்மடத்தில் செயல்படாத கண்காணிப்பு கேமராவை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தட்டார்மடம்:
தட்டார்மடத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பில் பஜாரில் ரவுண்டா அருகே நான்கு திசையிலும் காட்சிகளை பதிவு செய்யும் வகையில் 4 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் தட்டார்மடம் பஜாரில் ஏதேனும் சம்பவம் நடந்தால் இந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கண்டுபிடிக்க ஏதுவாக இருந்து வந்தது. இதற்கிடையே கண்காணிப்பு கேமரா பதிவு செய்யும் கணினி, முன்பிருந்த கட்டிடத்தில் இருந்து மற்றொரு கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது.
இந்தநிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாறை அறைக்கு செல்லும் வயர், அப்பகுதியில் சென்ற லாரியால் அறுந்து போனது. அதன்பின் அறுந்த வயர்கள் கண்காணிப்பு கேமராவில் சொருகி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கண்காணிப்பு கேமராவில் காட்சிகள் பதிவாகாமல் காட்சி பொருளாக உள்ளது. எனவே சேதமாகி காணப்படும் கண்காணிப்பு வயரை சீரமைத்து கேமரா செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.