மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி
கருங்கல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கருங்கல்:
கருங்கல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தொழிலாளி
தேங்காப்பட்டணம் ஆற்றுப்பள்ளி தெருவை சேர்ந்தவர் பீர் முகமது. இவருடைய மகன் சமீர் (வயது 36), தொழிலாளி. இவருக்கு ஹசீனா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று பிற்பகலில் சமீர் தேங்காப்பட்டணத்தில் இருந்து கருங்கல் செல்வதற்காக தனது நண்பர் சுலைமான் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார்.
தூக்கி வீசப்பட்டார்
அவர்கள் பாலூர் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கீழே சாய்ந்தது. இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த சமீர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சுலைமானுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த கருங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சமீர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.