தூத்துக்குடியில்போலீஸ் ரோந்து வாகனத்தில் ஜி.பி.எஸ். கருவி பொருத்த நடவடிக்கை: நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார்
தூத்துக்குடியில்போலீஸ் ரோந்து வாகனத்தில் ஜி.பி.எஸ். கருவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் ரோந்து வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் தெரிவித்தார்.
ரோந்து வாகனங்கள்
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் துறையின் ரோந்து பணிக்கு தமிழக அரசால் ரூ.65 லட்சம் மதிப்புளள 7 கார்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த ரோந்து வாகனங்கள் தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு போலீஸ் சூபபிரண்டு பாலாஜி சரவணன்தலைமை தாங்கினார். தூத்துக்குடி ஊரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் கலந்து கொண்டு ரோந்து வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து தூத்துக்குடி நகர பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு இந்த ரோந்து வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் கணேச மணிகண்டன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
நடவடிக்கை
இது குறித்து நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவேஷ்குமார் கூறும் போது, குற்றங்கள் நடக்காமல் தடுப்பதற்காக இந்த வாகனங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். குற்றங்கள் நடந்தால் விரைவாக செல்வதற்கும் வசதியாக இருக்கும். அரசு வழங்கி உள்ள இந்த வாகனங்கள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இந்த வாகனத்தில் ஜி.பி.எஸ் கருவி பொருத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தூத்துக்குடி மாநகரில் போலீஸ் நிலையங்கள் அதிகரிக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை என்று கூறினார்.