மின்கட்டண உயர்வை கண்டித்து நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வினர் திரளாக பங்கேற்க வேண்டும்: எஸ்.பி. சண்முகநாதன்


மின்கட்டண உயர்வை கண்டித்து நடக்கும் ஆர்ப்பாட்டத்தில்  அ.தி.மு.க.வினர் திரளாக பங்கேற்க வேண்டும்: எஸ்.பி. சண்முகநாதன்
x

தூத்துக்குடியில் வௌ்ளிக்கிழமை நடைபெறும் மின்கட்டண உயர்வை கண்டித்து நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வினர் திரளாக பங்கேற்க வேண்டும் என்று எஸ்.பி. சண்முகநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடிதெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மின் கட்டணத்தை உயர்த்தி தமிழக மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கி உள்ள தி.மு.க. அரசை கண்டித்தும், அறிவிக்கப்பட்டு உள்ள மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் அருகே தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எனது (எஸ்.பி.சண்முகநாதன்) தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

ஆர்ப்பாட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இதில் மாவட்ட, ஒன்றிய, மாநகர, பகுதி, நகர, பேரூராட்சி, மாநகர வட்ட, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு, கிளை நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், தொண்டர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story