ஈரோட்டில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய கழிவுநீரை வெளியேற்றக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
ஈரோட்டில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய கழிவுநீரை வெளியேற்றக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
ஈரோடு மாநகராட்சி 43-வது வார்டுக்கு உள்பட்ட மரப்பாலம் பகுதியில் பெரும்பள்ளம் ஓடை செல்கிறது. அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் இருந்து ஓடைக்கு செல்லும் கழிவுநீர் தடைபட்டது. எனவே குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்கும் அவலம் ஏற்பட்டது.
இந்த நிலையில் மரப்பாலம் ஜீவானந்தம் வீதியில் நேற்று காலை கழிவுநீர் தேங்கி நின்றது. பொதுமக்கள் நடந்துக்கூட செல்ல முடியாத அளவுக்கு கழிவுநீர் குடியிருப்புகளை ஆக்கிரமித்த வகையில் சூழ்ந்து காணப்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் சரி செய்து கொடுக்கப்படவில்லை. எனவே தேங்கிய கழிவுநீரை வெளியேற்றக்கோரி ஈரோடு மரப்பாலம் நால்ரோடு பகுதியில் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
நிரந்தர தீர்வு
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது கழிவுநீர் வெளியேற்றப்படும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். அவர் உடனடியாக கழிவுநீரை வெளியேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்பிறகு கழிவுநீரை வெளியேற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். மேலும், அங்கு கழிவுநீர் இனிமேல் தேங்காத வகையில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் திடீர் சாலை மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.