அந்தியூர் அருகே பள்ளிக்கூடத்தில்சத்துணவு சாப்பிட்ட 129 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம்
அந்தியூர் அருகே பள்ளிக்கூடத்தில் சத்துணவு சாப்பிட்ட 129 மாணவ-மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்தியூர்
அந்தியூர் அருகே பள்ளிக்கூடத்தில் சத்துணவு சாப்பிட்ட 129 மாணவ-மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சத்துணவு சாப்பிட்டனர்
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த அத்தாணி அருகே கரட்டூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் அத்தாணி, கரட்டூர் பகுதியை சேர்ந்த சுமார் 150 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கூடம் செயல்பட்டு கொண்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் பள்ளிக்கூடத்தில் மாணவ-மாணவிகளுக்கு சத்துணவில் காய்கறி சாதம் வழங்கப்பட்டது. இதனை 129 மாணவ-மாணவிகள் சாப்பிட்டுள்ளனர். அதன்பின்னர் அவர்கள் வகுப்பறைக்கு சென்று பாடத்தை கவனித்து வந்தனர். இந்த நிலையில் மாலை 4 மணி அளவில் பள்ளிக்கூடம் முடிந்ததும் மாணவ-மாணவிகள் அனைவரும் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.
வாந்தி-மயக்கம்
அப்போது சத்துணவு சாப்பிட்ட மாணவ-மாணவிகளுக்கு வாந்தி-பேதி ஏற்பட்டுள்ளது. ஒரு சிலர் மயக்கம் வருவதாக தெரிவித்தனர். இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மாணவ-மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரி, அத்தாணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். உடனே மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. ஒரு சிலருக்கு குளுக்கோசும் ஏற்றப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் அந்தியூர் தொகுதி ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு விரைந்து சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் மாணவ-மாணவிகளை பார்வையிட்டார். மேலும் அவர்களது பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
போலீசார் விசாரணை
தொடர்ந்து அவர் மாணவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும் என்று டாக்டர்களிடம் கேட்டுக்கொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஆப்பக்கூடல் போலீசாரும் ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.
மாணவ-மாணவிகளுக்கு எதனால் வாந்தி-பேதி, மயக்கம் ஏற்பட்டது? என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அந்தியூர் அருகே பள்ளிக்கூடத்தில் சத்துணவு சாப்பிட்ட மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.