மார்த்தாண்டம் போலீஸ் நிலையம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைது
மார்த்தாண்டத்தில் போலீஸ் நிலையம் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட பெண், போலீசாரை தகாத வார்த்தையால் பேசி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
குழித்துறை,
மார்த்தாண்டத்தில் போலீஸ் நிலையம் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட பெண், போலீசாரை தகாத வார்த்தையால் பேசி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
போலீஸ் நிலையத்தில்...
களியக்காவிளை அருகே மேக்கோடு காரக்காவிளையை சேர்ந்த அர்ஜூனன் மகள் ஜோஸ்பின் (வயது 40). இவர் கடந்த 1.8.2020-ல் வெட்டுமணியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவர் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
அப்போது மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக இருந்த சுரேஷ்குமார் தன்னிடம் வாக்குமூலம் பெற்று போலியான கையெழுத்திட்டு தன்னை ஏமாற்றி விட்டதாக மாவட்ட காவல்துறை அதிகாரிக்கு புகார் கொடுத்தார். இதனை தொடர்ந்து மாவட்ட காவல்துறை அலுவலகம் மூலம் மதுரை தடயவியல் குழுவினர் அதற்குரிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெண் போராட்டம்
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர் தீபா என்பவர் பணியில் இருந்த போது ஜோஸ்பின் சென்றுள்ளார்.
அங்கு இன்ஸ்பெக்டர் எங்கே என்று ஜோஸ்பின் ஆணவத்தோடு கேட்டுள்ளார். மேலும் தீபாவை மிரட்டியதுடன் இன்ஸ்பெக்டரை பார்க்காமல் இங்கிருந்து செல்ல மாட்டேன் என கூறி போலீஸ் நிலைய வாசல் முன்பு அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார்.
உடனே தீபா அவரிடம் சென்று பார்வையாளர் இடத்தில் சென்று அமருங்கள் என கூறியுள்ளார். அதற்கு அவர், தான் கொடுத்த புகார் மனுவிற்கு எப்.ஐ.ஆர். பதிவு செய்து, எனக்கு நகல் தர வேண்டும் என்றும் இல்லையேல் இங்கிருந்து போக மாட்டேன் என்று கூறி அடம் பிடித்துள்ளார்.
கைது
அப்போது அங்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அவரிடம் விசாரணை குறித்த விவரத்தை தெரிவித்துள்ளார். ஆனால் எப்.ஐ.ஆர். போட்டு தந்தால் தான் இந்த இடத்தை விட்டு செல்வேன். இல்லையென்றால் உங்களை விட மாட்டேன் என கூறி கொலை மிரட்டல் விடுத்ததோடு தரக்குறைவாகவும் பேசியதாக தெரிகிறது.
மேலும் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு வந்திருந்த 2 வக்கீல்களையும், 3 ஆட்டோ டிரைவர்களையும் உள்ளே விடாதபடி வாசலை மறைத்து உட்கார்ந்திருந்தார். இதனால் போலீசாரின் பணியையும் மேற்கொள்ள விடாமல் அவர் தடுத்தார்.
இதுகுறித்து தீபா கொடுத்த புகாரின் பேரில் ஜோஸ்பின் மீது மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்தார்.
அதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் விசாரணை நடத்தி ஜோஸ்பினை கைது செய்தார்.