பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது


பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது
x

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் 2,500 போலீசாரின் பாதுகாப்போடு அ.தி.மு.க. பொதுக்குழு இன்று (வியாழக்கிழமை) கூடுகிறது. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது.

சென்னை,

அ.தி.மு.க.வில் அரங்கேறி வரும் ஒற்றை தலைமை விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒற்றை தலைமை கோஷம்

இதற்கிடையே சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு அ.தி.மு.க. பொதுக்குழு கூடுகிறது.

எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த பொதுக்குழு கூட்டம் இந்த முறை மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் ஒற்றை தலைமை என்ற கோஷத்துடன் நடக்க இருக்கிறது. நடக்குமா? நடக்காதா? என்று நொடிக்கு நொடி பரபரப்பான காட்சிகள் கடந்த சில நாட்களாக அரங்கேறி வந்தது.

பொதுக்குழுவை நடத்தக்கூடாது என்பதில் ஓ.பன்னீர்செல்வமும், நடத்தியே தீருவது என்ற முடிவில் எடப்பாடி பழனிசாமியும் இருந்ததால் அ.தி.மு.க.வில் உச்சகட்ட பரபரப்பு நிலவியது.

பெருகிய ஆதரவு

ஆனால் திட்டமிட்டபடி அ.தி.மு.க. பொதுக்குழு-செயற்குழு கூட்டம் இன்று தொடங்க இருக்கிறது. தற்காலிக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் இந்த கூட்டத்தை நடத்துகிறார்.

மொத்தம் உள்ள 2,625 பொதுக்குழு உறுப்பினர்களில் எடப்பாடி பழனிசாமிக்கு 2505 பேரும், ஓ.பன்னீர்செல்வத்திற்கு 120 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

எடப்பாடி பழனிசாமிக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகியவண்ணம் உள்ளது. மொத்தம் உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 69 மாவட்ட செயலாளர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது. எம்.எல்.ஏ.க்களில் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கத்தை தவிர மற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். அ.தி.மு.க.வின் மற்ற அணிகளின் தலைவர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

2,500 போலீசார் குவிப்பு

தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடக்காத வண்ணம் அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு வரலாறு காணாத வகையில் போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட இருக்கிறது. சுமார் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள். அடையாள அட்டைகளுடன் வரும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மட்டும் கூட்டத்திற்கு செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

இதற்காக பொதுக்குழு உறுப்பினர்களின் புகைப்படங்களுடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த அடையாள அட்டைகளில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் படங்கள் இடம் பெற்றுள்ளது. பொதுக்குழு நடக்கும் இடத்திற்குள் கட்சி நிர்வாகிகளின் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

ஒரு பக்கம் விறுவிறுப்பான ஏற்பாடுகள் வானகரத்தில் நடந்து வருகிறது. பந்தல்கள் அமைக்கப்பட்டு, வரவேற்பு பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. யார்-யார் எங்கு அமர வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு நடக்கும் இடத்தை முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.

பொதுக்குழு அரங்கத்திற்கு வெளியே எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் பூங்கொத்து கொடுப்பது போன்ற பேனர்களும் இடம் பெற்றுள்ளது.

பொதுச்செயலாளர் ஆகிறார் எடப்பாடி பழனிசாமி

இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்குவதற்கும், மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கும் வகையில் அ.தி.மு.க. சட்டவிதிகளை மாற்றுவதற்குமான சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

பொதுச்செயலாளராக ஏகமனதாக பொதுக்குழு உறுப்பினர்களால் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட இருக்கிறார். அதனைத்தொடர்ந்து மேகதாது எதிர்ப்பு உள்பட 23 முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட இருக்கிறது. பொதுக்குழுவில் பங்கேற்பவர்களுக்கு உணவுகள் பரிமாறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 2 உணவு கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஓ.பன்னீர்செல்வம் வருவாரா?

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருக்கும் தனி தீர்மானம் தவிர மற்ற 23 தீர்மானங்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் பார்வைக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும், அதற்கு அவர் ஒப்புதல் வழங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஒற்றை தலைமை விவகாரத்தில் உரசல் ஏற்பட்டிருப்பதால் இந்த பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இருப்பினும் கட்சியின் பொருளாளர் என்ற அடிப்படையில் வரவு-செலவு கணக்கு அவரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும், அவர் வராத பட்சத்தில் அதனை வேறு ஒருவர் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேநேரத்தில் இந்த பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என்பதால் பரபரப்புக்கு கொஞ்சம் கூட பஞ்சம் இருக்காது.

எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து

பொதுக்குழு இன்று நடக்க இருக்கும் நிலையில் பசுமைவழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களிடம் நேற்று வாழ்த்து பெற்றார்.

இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த மூத்த தலைவர் மைத்ரேயன், முன்னாள் எம்.எல்.ஏ. வேளச்சேரி அசோக் உள்பட பலர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் நேரில் சென்று எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தடை கோரிய மனு தள்ளுபடி

இதற்கிடையே அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதேபோல் இதே விவகாரம் தொடர்பாக சென்னை சிவில் கோர்ட்டில் தொடரப்பட்ட மற்றொரு மனுவும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.


Next Story