விவசாய பண்ணைகளில் தரமான பருத்தி விதைகளை உற்பத்தி செய்வது எப்படி?:விதைச்சான்று அதிகாரி விளக்கம்
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விவசாய பண்ணைகளில் தரமான பருத்தி விதைகளை உற்பத்தி செய்வது எப்படி? என்று விதைச்சான்று அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விதைப்பண்ணை
பருத்திப் பயிரானது அடிக்கடி அயல் மகரந்த சேர்க்கை ஏற்படும் பயிராகும். இதனால் விதைப்பண்ணையின் அருகிலோ அல்லது விதைப்பண்ணையின் உள்ளேயோ வேறு இரகங்கள் பூப்பருவத்தில் இருந்தால் அதன் மூலம் அயல் மகரந்த சேர்க்கை ஏற்பட்டு கலவன் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
எனவே பருத்திப் பயிரில் எஸ்.வி.பி.ஆர். 2 மற்றும் எம்.சி.யு. 7 போன்ற ரகங்களில் விதைப்பண்ணை அமைக்கும் விவசாயிகள் சான்று நிலை விதைப்பண்ணைக்கு 30 மீட்டர் தூரத்தில் அல்லது ஆதாரநிலை விதைப்பண்ணைக்கு 50 மீட்டர் தூரத்தில், விதைப்பண்ணை அமைத்திருக்கும் ரகம் அல்லாத வேறு ரகங்கள் இல்லாமலோ அல்லது வேறு ரகங்களின் பூப்பருவம் விதைப்பண்ணையின் பூப்பருவத்தோடு இணைந்து வராமல் இருக்கும்படியும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தரமான விதை உற்பத்தி
மேலும் விதைப்பண்ணையின் உள்ளே பூப்பருவத்தில் கலவன்கள் தென்பட்டால் அவற்றை பூக்கள் விரியும் பருவத்திலேயே அகற்ற வேண்டும். பூக்கள் விரிந்து மகரந்தம் வெளிப்பட்டு விட்டால் அயல் மகரந்த சேர்க்கை ஏற்பட்டு கலவன் உருவாக வாய்ப்பு உள்ளது. எனவே அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். காய்கள் உருவாகும் பருவத்திலும் விதைச்சான்று அலுவலரால் சுட்டிக்காட்டப்படும் கலவன்களை அகற்ற வேண்டும்.எனவே பருத்தி விதைப்பண்ணை விவசாயிகள் மேற்கண்ட நடைமுறைகளைப் பின்பற்றினால், பருத்தியில் தரமான விதை உற்பத்தியை மேற்கொண்டு அதிக லாபம் பெறலாம், என தெரிவித்துள்ளார்.