அனைத்து வருவாய் கிராமங்களிலும்வேளாண் அடுக்கு திட்டம் சிறப்பு முகாம்
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் வேளாண் அடுக்கு திட்டம் சிறப்பு முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் விவசாயிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் எளிதில் கிடைக்கும் வகையில், அவர்களது விபரங்கள் வேளாம் அடுக்கு திட்டசிறப்பு முகாம் மூலம் இணையதளத்தில் பதிவேற்றம் ெசய்யப்பட்டுள்ளது.
வேளாண் அடுக்கு திட்டம்
தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் வேளாண் அடுக்கு திட்டம் வேளாண்மைத் துறையால் உருவாக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாமில், தாசில்தார், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் மேற்பார்வையில் துறை சார்ந்த அலுவலர்கள் இணைந்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயிகளின் தனிநபர் மற்றும் நில உடைமை ஆவணங்களை GRAIN என்ற இணைதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியை மேற்கொண்டனர்.
இதனால் விவசாயிகளின் விவரங்கள் நேரடியாக இணையதளத்தில் பதிவு செய்வதால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் துறை சார்ந்த திட்டங்களுக்கு விவசாயிகளின் அடிப்படை விவரங்கள் மற்றும் பயிர் விவரங்களை தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு அரசின் திட்டங்களில் உள்ள பயன்களை விவசாயிகளுக்கு அளிக்க முடியும்.
நேரடி பணப்பரிமாற்றம்
மேலும் நிதி திட்டப் பலன்கள் ஆதார் எண் அடிப்படையில் நேரடி பணப்பரிமாற்றம் மூலம் விவசாயிகளின் வங்கி கணக்குக்கு நேரடியாக அனுப்ப வழிவகுக்கிறது. இதற்காக விவசாயிகள் தங்கள் ஆதார் எண் விவரம், விவசாயின் புகைப்படம், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு எண், நில உரிமை ஆவணங்கள் ஆகியவற்றை தாமாக முன்வந்து பதிவேற்றம் செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சொ.பழனிவேலாயுதம், விளாத்திகுளம் தாலுகா கல்லூரணி கிராமத்தில் நடந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு இவ்வலைதள பதிவேற்றம் குறித்து நேரடியாக ஆய்வு செய்தார்.