வரும் தேர்தல்கள் அனைத்திலும் தி.மு.க. வெற்றி பெறும்

வரும் தேர்தல்கள் அனைத்திலும் தி.மு.க. வெற்றி பெறும் என்று அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
வரும் தேர்தல்கள் அனைத்திலும் தி.மு.க. வெற்றி பெறும் என்று அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
திருப்பத்தூரில் நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் நீர்வளம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-
தி.மு.க. வெற்றி பெறும்
ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து விலகி பெரியார் முதன்முதலாக சுயமரியாதை கூட்டத்தை நடத்தியது திருப்பத்தூரில் தான். வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் தி.மு.க.வின் தாயகமாக விளங்குவது திருப்பத்தூர். வரும் தேர்தல்களில் அனைத்திலும் தி.மு.க. வெற்றி பெறும்.
மேலும் இந்த மாவட்டத்தில் காலணி தொழிற்சாலை, பீடி தொழிற்சாலை மட்டுமே உள்ளது. இப்பகுதியில் கூடுதலான தொழிற்சாலைகளை அமைத்து தர முதல்-அமைச்சருக்கு இத்தருணத்தில் கோரிக்கை வைக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-
முதலிடம்
திருப்பத்தூர் ஒரு காலத்தில் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதியாக இருந்தது. 1790-ம் ஆண்டு சேலம், வேலூர் ஆகிய இரு பகுதிகளுக்கும் திருப்பத்தூர் மாவட்ட தலைமையாக இருந்தது. மேலும், தமிழகத்தில் அதிக வருவாயை ஈட்டித் தருவதில் திருப்பத்தூர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.
தமிழகத்திலேயே திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர்-ஜோலார்பேட்டை- -வாணியம்பாடி-ஆம்பூர் பிரதான தேசிய நெடுஞ்சாலை உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் நெடுஞ்சாலை விபத்தில் 83 ஆயிரத்து 512 பேர் ரூ.76 கோடி செலவில் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் காந்தி
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பேசியதாவது:-
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைக்கப்பட்டபோது கொரோனா தொற்று பரவல் அதிகரித்திருந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க வெகுமுயற்சி எடுத்தார்.
அதன்பேரில் கொரோனா தொற்று இல்லாத தமிழகமாக மாறியது. இதில் அவருக்கு மக்களின் மேல் இருந்த நலனை காட்டியது. மேலும், தி.மு.க. ஆட்சியில் மட்டும்தான் அரசே மக்களை தேடி நலத்திட்டங்கள் கொண்டு செல்கின்றன என்பதை பெருமிதமாக சொல்லலாம்.
திருப்பத்தூருக்கு வருகை தந்த முதல்-அமைச்சருக்கு வழிநெடுகிலும் அனைத்து தரப்பினரும் வரவேற்பு அளித்தது தற்போதுதான் காண்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.