அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கிராம சபை கூட்டம் நடக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கிராம சபை கூட்டம் நடக்கிறது.
கிராம சபை கூட்டம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உள்ளாட்சிகள் தினமான நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பகல் 11 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன. கூட்டம் நடைபெறும் இடம், நேரம், ஆகியன தொடர்புடைய கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.
நாளை மறுநாள் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில், நவம்பர் மாதம் 1-ந்தேதி தமிழகத்தின் உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும் என அறிவிப்பு செய்து அதனை சிறப்பிக்கும் விதமாக கிராம சபை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திட உத்தரவு வழங்கிய தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தல்.
ஜல் ஜீவன் திட்டம்
கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை சிறப்பித்தல். கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கவுரவித்தல். 2021-2022 மற்றும் 2022-2023-ம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2-ன் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விவரத்தினை கூட்டத்தில் வைத்தல்.
கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு பணி முடிவுற்ற விவரத்தினை கிராம சபைக்கு தெரிவித்தல். ஜல் ஜீவன் திட்டத்திற்கு நம் ஊராட்சியில் உள்ள அனைவரும் தவறாமல் சமுதாய பங்களிப்பினை செலுத்தி இந்த திட்டத்தின் செயல்பாட்டில் துணை நிற்போம் என தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
வீட்டுவரி -சொத்துவரி
மேலும் மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள, எடுக்கப்பட வேண்டிய பணிகளுக்கு கிராம சபையில் ஒப்புதல் பெறுதல். வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி வீட்டுவரி -சொத்துவரி செலுத்துதல், மகளிர் சுய உதவிக்குழு உருவாக்குதல், மக்கள் நிலை ஆய்வுப்பட்டியலில் விடுபட்ட -புதிய இலக்கு மக்கள் குடும்பங்களை சேர்த்தல் மற்றும் இதர பொருட்கள் உள்ளிட்ட கூட்டப்பொருட்கள் விவாதிக்கப்படும்.
அனைத்து கிராம ஊராட்சிகளும் கிராம சபை கூட்டங்கள் முறையாக நடைபெறுவதை கண்காணிக்கும் பொருட்டு வட்டார அளவில் உதவி இயக்குனர் நிலையில் பற்றாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை மறுநாள் திட்ட பணிகள் குறித்த கண்காட்சியும் நடைபெறவுள்ளது.
மேற்கண்ட தகவல் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.