மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதில்லை;மத்திய மந்திரி நிஷித் பிரமானிக் பேட்டி


மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில்   மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதில்லை;மத்திய மந்திரி நிஷித் பிரமானிக் பேட்டி
x

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதில்லை என்று உள்துறை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை இணை மந்திரி நிஷித் பிரமானிக் கூறினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதில்லை என்று உள்துறை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை இணை மந்திரி நிஷித் பிரமானிக் கூறினார்.

மத்திய மந்திரி படகில் பயணம்

மத்திய உள்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை இணை மந்திரி நிஷித் பிரமானிக் நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரிக்கு வந்தார். அவரை கலெக்டர் அரவிந்த், போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் மற்றும் பா.ஜனதாவினர் வரவேற்றனர்.

நேற்று காலை மத்திய மந்திரி நிஷித் பிரமானிக் படகு மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சென்று பார்த்தார். அதன்பிறகு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருடன் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட பொருளாதார பிரிவு தலைவர் சுபாஷ் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் அவர் நாகர்கோவிலுக்கு புறப்பட்டு வந்தார்

ஆய்வு கூட்டம்

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மத்திய அரசு சார்பில் குமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கலெக்டர் அரவிந்த் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் உள்துறை இணை மந்திரி நிஷித் பிரமானிக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 44 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது, 'மத்திய அரசின் ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் 16 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், பிரதம மந்திரி முத்திரா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சம் மதிப்பில் 5 பயனாளிகளுக்கு கடன் உதவியும், பிரதம மந்திரி சுவாநிதி யோஜனா திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு கடன் உதவியும், சுகன்யா சம்ரித் யோஜனா திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சுவஜ்பாரத் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது' என்றார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, மாவட்ட வன அலுவலர் இளையராஜா, திட்ட இயக்குனர்கள் தனபதி (ஊரக வளர்ச்சி முகமை), மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ (மகளிர் திட்டம்), மாவட்ட வருவாய் அலுவலர் (நிலஎடுப்பு) ரேவதி உள்பட அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி

மத்திய மந்திரி நிஷித் பிரமானிக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கு விளையாட்டுத்துறை சார்பில் எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.

விளையாட்டுத் துறையினருக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் அதிகமான திட்டங்களை கொண்டுவந்து, இளைஞர்களை சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்குவதே எங்கள் துறையின் வெற்றி என கருதுகிறேன். அதற்காக விளையாட்டுத்துறையில் உள்ள இளைஞர்களுக்கு ஊக்கம் கொடுக்க பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கொரோனாவுக்கு பின்பும் உக்ரைன், ரஷியா, சீனா போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைக்கு மத்தியிலும் இந்தியா அமைதியான நாடாக திகழ்கிறது. சிலம்பம் மட்டுமல்ல, நம் பாரம்பரிய விளையாட்டுகள் அனைத்தையும் ஒலிம்பிக்கில் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளும்.

இந்தியாவில் வேலை வாய்ப்பு இல்லை என ராகுல்காந்தி நடை பயணத்தில் குற்றம் சாட்டுகிறார். கொரோனாவுக்கு பிறகு வேலைவாய்ப்பும் தடைப்பட்டது. அது செயற்கையாக ஏற்பட்டது. இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக அனைத்து துறைகளும் இணைத்து திட்டமிட்டு செயலாற்றி வருகின்றன.

நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் இல்லை

நாட்டின் பாதுகாப்புக்கும், மக்களுக்கும் எதிராக செயல்படுகின்ற அமைப்புகள் மற்றும் இயக்கங்களை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்ற நிலையில் தேசவிரோத அமைப்புகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

ஒரு வேட்பாளர் எத்தனை தொகுதியில் போட்டியிடலாம் என்பதை தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்யும். மாநிலங்களின் திட்டங்களின் அடிப்படையில் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story