அம்மாபேட்டையில்முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்ட அட்டை வழங்க ரூ.50 வசூல் பொதுமக்கள் புகாரால் பணத்தை திரும்ப வழங்க உத்தரவு
அம்மாபேட்டையில் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்ட அட்டை வழங்க ரூ.50 வசூல் செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட புகாரால் பணத்தை திரும்ப வழங்க உத்தரவிடப்பட்டது.
முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்துடன் பாரத பிரதம மந்திரி மக்கள் ஆரோக்யா திட்டம் இணைந்து ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற பொதுமக்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
அம்மாபேட்டை பேரூராட்சி மற்றும் படவல் கால்வாய் ஊராட்சி பகுதிகளில் இத்திட்டத்துக்காக அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் காப்பீட்டு திட்ட அடையாள அட்டை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் படவல் கால்வாய் ஊராட்சி அலுவலக வளாகத்தில் காப்பீட்டு திட்ட அடையாள அட்டைக்கு பொது மக்களிடம் இருந்து கட்டாயமாக ரூ.50 வசூல் செய்துள்ளனர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் தமிழக அரசின் இலவச தொலைபேசி எண்ணுக்கு அழைத்து இதுகுறித்து புகார் அளித்தனர். அதன்பேரில் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் ஈரோடு மாவட்ட திட்ட அதிகாரி விஜயக்குமார், படவல் கால்வாய் பகுதியில் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது பொதுமக்களிடம் ரூ.50 கட்டாயமாக வசூல் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்ட திட்ட அதிகாரி விஜயக்குமார் பொதுமக்களிடம் வசூல் செய்த பணத்தை திரும்ப வழங்க உத்தரவிட்டார். அதன்படி அடையாள அட்டை பெற்றவர்கள் படவல்கால்வாய் ஊராட்சி அலுவலகத்தில் வந்து ரூ.50 பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து முதல்-அமைச்சர் காப்பீடு திட்டத்தின் ஈரோடு மாவட்ட திட்ட அதிகாரி விஜயக்குமார் கூறும்போது, 'காப்பீடு அட்டை வழங்க பணம் வசூல் செய்த பணியாளர்கள் வசூல் செய்தது தவறு என்றும், இனிமேல் வசூல் செய்ய மாட்டோம் என்றும் எழுதி கொடுத்துள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய அனைவரையும் ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துள்ளோம்' என்றார்.