ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் குப்பைகளில் இருந்து மண்புழு, உயிர்ச்சத்து உரங்கள் தயாரிப்பு
ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் குப்பைகளில் இருந்து தயாரிக்கப்படும் மண்புழு உரம் மற்றும் உயிர்ச்சத்து உரங்களை பொதுமக்கள், விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
மாதிரி பேரூராட்சி
திடக்கழிவு மேலாண்மையை தீவிரப்படுத்தும் விதமாக தமிழகத்தில் உள்ள 22 பேரூராட்சிகள் மாதிரி பேரூராட்சிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் தேனி மாவட்டத்தில் இருந்து ஆண்டிப்பட்டி பேரூராட்சியும் தேர்வு செய்யப்பட்டு, அங்கு திடக்கழிவு மேலாண்மை தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 18 வார்டுகள் உள்ள இந்த பேரூராட்சியில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இங்கு துப்புரவு பணியாளர்கள் வாகனங்கள் மூலம் தினமும் வீடுகளுக்கே சென்று பொதுமக்களிடம் குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.குப்பைகளை சேகரிக்க வரும் துப்புரவு பணியாளர்களிடம் பொதுமக்கள் மக்கும், மக்காத குப்பை என பிரித்து வழங்க வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகம் வலியுறுத்தியது. இதனால் பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்கி வருகின்றனர்.
மலிவு விலை உரம்
இதையடுத்து துப்புரவு பணியாளர்கள் சேகரிக்கப்பட்ட குப்பைகளை உரக்கிடங்கிற்கு கொண்டு வந்்து அதனை எடை போட்டு மக்கும் குப்பைகளை பிரித்து உரமாக்கும் பணியை தொடங்குகின்றனர். மக்கும் குப்பைகளை குறிப்பிட்ட நாட்களுக்கு உலர செய்து அதனை உயிர்ச்சத்து உரமாக மாற்றுகின்றனர். மேலும் மண்புழு உரங்கள் தயாரிக்கவும் அதே உரக்கிடங்கிற்குள் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது.
அங்கு மக்கும் குப்பைகளை கொண்டு மண்புழு உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. எந்தவிதமான ரசாயன கலவைகளும் இல்லாமல் இயற்கையான முறையில் தயாரிக்கும் இந்த உரங்களை ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். அதன்படி உயிர்ச்சத்து உரங்கள் கிலோ ரூ.3, மண்புழு உரங்கள் கிலோ ரூ.5-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.