அந்தியூர் பகுதியில் வீடுகளில் கைவரிசை காட்டிய கொள்ளையன் கைது
கொள்ளையன் கைது
அந்தியூர் பகுதியில் வீடுகளில் கைவரிசை காட்டிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார்சைக்கிளை திருடியபோது கோவையில் கையும் களமாக சிக்கினான்.
தொடர் திருட்டு
அந்தியூர் பகுதியில் உள்ள சந்தை கடை அருகே இறைச்சி கடையில் வைக்கப்பட்டிருந்த டி.வி., கியாஸ் சிலிண்டர் மற்றும் சிங்கார வீதியில் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியன கடந்த 6-ந் தேதி திருடப்பட்டிருந்தது. மேலும் அந்தியூரில் திறந்திருந்த ஒரு வீடு புகுந்து லேப்டாப்பும், அதன் அருகே உள்ள வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மொபட்டும் திருட்டுப்போனது.
இதுகுறித்து அவற்றின் உரிமையாளர்கள் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்தநிலையில் கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிளை ஒருவர் தள்ளிக்கொண்டு சென்றார்.
ஒப்படைப்பு
இதைப்பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் அவரை கையும், களவுமாக பிடித்தார். பின்னர் நடத்திய விசாரணையில் அந்த நபர் அந்தியூர் அருகே உள்ள குருவரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (வயது 31) என்பதும், அவர் தான் அந்தியூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மோட்டார்சைக்கிளை திருட முயன்றதாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் முருகேசனை அந்தியூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கைது
இதையடுத்து அந்தியூர் போலீசார் நடத்திய விசாரணையின்போது முருகேசன் அந்தியூர் சந்தை கடை அருகே இறைச்சி கடையில் வைக்கப்பட்டிருந்த டி.வி., கியாஸ் சிலிண்டர், சிங்கார வீதியில் நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார்சைக்கிள்கள் மற்றும் அந்தியூரில் வீடு புகுந்து லேப்டாப், மொபட் ஆகியவற்றை திருடியதை ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து திருடப்பட்ட டி.வி., கியாஸ் சிலிண்டர், 2 மோட்டார்சைக்கிள்கள், லேப்டாப், ஒரு மொபட் ஆகியவை மீட்கப்பட்டன.