அந்தியூரில் ரூ.70 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட முதியவர் மீட்பு
அந்தியூரில்
அந்தியூரில் ரூ.70 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட முதியவரை போலீசார் மீட்டனர்.
கடத்தல்
அந்தியூர் ஏ.எஸ்.எம்.காலனி பகுதியை சேர்ந்தவர் ஹனிபா (வயது 60). தொழிலாளி. கடந்த 8-ந் தேதி அன்று தனது வீடு அருகே நடந்து சென்று கொண்டிருந்த அவரை 6 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்றது. பின்னர் ஹனிபாவின் மனைவி ரஹிமத்தை கடத்தல் கும்பலை சேர்ந்த மர்ம நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு, 'நாங்கள் ஹனிபாவை கடத்தி வைத்து உள்ளோம். அவரை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.70 லட்சம் தரவேண்டும்,' என மிரட்டிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டார்.
மீட்பு
இதுகுறித்த புகாரின் பேரில் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சேலத்தில் பதுங்கி இருந்ததாக சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள குள்ளவீரம்பட்டியை சேர்ந்த மோகன் குமார் (28), மேட்டூர் கருமலைக்கூடலை சேர்ந்த மாணிக்கம் (28) ஆகிய 2 பேரையும் கைது செய்ததும் அறிந்ததே. கைது ெசய்யப்பட்டவா்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், 'கடத்தப்பட்ட ஹனிபாவை மேட்டூரில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் அடைத்து வைத்திருப்பதாக,' தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று ஹனிபாவை மீட்டனர்.
கடத்தலுக்கான...
மீட்கப்பட்ட அவர் அந்தியூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். போலீசார் மேலும் நடத்திய விசாரணையில் இந்த கடத்தலில் தொடர்புடைய 4 பேரின் விவரங்களை கைது செய்யப்பட்ட 2 பேரும் தெரிவித்து உள்ளனர். எனவே இந்த கடத்தலில் தொடர்புடைய மேலும் 4 பேரை கைது செய்தால்தான், கடத்தலுக்கான முழு விவரமும் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.