பவானிசாகர் வனப்பகுதியில் மானுக்கு வைத்த சுருக்கு கம்பியில் சிக்கி புலி சாவு
பவானிசாகர் வனப்பகுதியில் மானுக்கு வைத்த சுருக்கு கம்பியில் சிக்கிய புலி செத்தது. இது தொடர்பாக சிறுவன் உள்பட 7 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
பவானிசாகர்
பவானிசாகர் வனப்பகுதியில் மானுக்கு வைத்த சுருக்கு கம்பியில் சிக்கிய புலி செத்தது. இது தொடர்பாக சிறுவன் உள்பட 7 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
புலி செத்து கிடந்தது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, கேர்மாளம் ஆசனூர், விளாமுண்டி உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்குட்பட்ட வனப்பகுதியில் பல்வேறு வனவிலங்குகள் காணப்படுகின்றன.
இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி பவானிசாகர் வனச்சரகத்துக்குட்பட்ட கொத்தமங்கலம் கூப்புக்காடு பகுதியில் வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அங்கு புலி ஒன்று அழுகிய நிலையில் செத்து கிடந்ததை கண்டனர். மேலும் புலியின் கழுத்தில் சுருக்கு கம்பி (பிரேக் ஒயர்) இருந்ததை கண்டனர். எனவே மர்ம நபர்கள் சுருக்கு கம்பி வைத்து புலியை கொன்றது தெரியவந்தது.
7 பேர் கைது
இதுகுறித்து பவானிசாகர் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பவானிசாகரை அடுத்த பூதிகுப்பையை சேர்ந்த கருப்பசாமி மகன் சதீஸ்குமார் (வயது 27), சுஜில்குட்டையை சேர்ந்த துரைசாமி மகன் நாச்சிமுத்து (22), கருப்பசாமி மகன் பத்மகுமார் (19), ராமசாமி மகன் சவுந்தர்ராஜன் (19). புங்கார் காலனியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் லோகேஷ் (22), சிவசாமி மகன் பால்தினகரன் (22) மற்றும் பவானிசாகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 7 பேரும் சேர்ந்து புலியை கொன்றது தெரியவந்தது.
அதாவது அவர்கள் 7 பேரும் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு தண்ணீர் குடிக்க வரும் மான்களை வேட்டையாடுவதற்காக சுருக்கு கம்பி வைத்து உள்ளனர். அவ்வாறு வைக்கப்பட்ட சுருக்கு கம்பியில், அணைக்கு தண்ணீர் குடிக்க வந்த புலி சிக்கி உள்ளது. பின்னர் அந்த புலி அங்கிருந்து சுருக்கு கம்பியுடன் தப்பி ஓடி 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கொத்தமங்கலம் கூப்புக்காடு பகுதியில் கீழே விழுந்து உயிரிழந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் 7 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.