பவானிசாகர் வனப்பகுதியில்பாதியில் நிற்கும் பழங்குடியினர் அருங்காட்சியகம்முழுமை பெறுவது எப்போது? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு


பவானிசாகர் வனப்பகுதியில்பாதியில் நிற்கும் பழங்குடியினர் அருங்காட்சியகம்முழுமை பெறுவது எப்போது? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
x

பவானிசாகர் வனப்பகுதியில் பாதியில் நிற்கும் பழங்குடியினர் அருங்காட்சியகம் முழுமை பெறுவது எப்போது என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனா்.

ஈரோடு

பவானிசாகர் வனப்பகுதியில் பழங்குடியினர் அருங்காட்சியம் அமைக்கும் பணி பாதியில் நிற்கிறது. இந்த பணி முழுமை பெறுவது எப்போது? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பழங்குடியினர் அருங்காட்சியகம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்டது பவானிசாகர் வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் உள்ள காராச்சிக்கொரையில் ரூ.7 கோடி செலவில் தமிழகத்திலேயே முதன்முறையாக பழங்குடியினர் வாழ்க்கையை விவரிக்கும் வகையிலான பழங்குடியினர் அருங்காட்சியகம் அமைக்கும் பணி 12 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வருகிறது.

பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையை விளக்கும் வகையில் தத்துருவமாக சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கலையரங்கம் உள்ளிட்ட அனைத்து வசதிகள் கொண்ட கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளன.

நிதிப்பற்றாக்குறை

இந்த திட்டம் கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. அப்போது இந்த திட்டத்துக்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால் மதிப்பீட்டு தொகைக்குள் பணிகள் முடியவில்லை. இதனால் அருங்காட்சியக பணிகள் பாதியிலேயே நிற்கின்றன.

அருங்காட்சியக பணிகளை முழுமையாக முடிக்க மேலும் ரூ.2 கோடி தேவைப்படும் என வனத்துறையினர் அறிக்கை தயார் செய்து தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி உள்ளனர். எனவே நிதிப்பற்றாக்குறையால் நிற்கும் இந்த பணி எப்போது முடியும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

பழங்குடியின மக்களே...

விலங்குகள் மற்றும் பறவைகள் ஆராய்ச்சியாளர் சந்திரசேகர்:-

ஆப்பிரிக்காவில் உள்ள மசாய் என்ற பழங்குடியின மக்கள் மாரா என்ற பகுதியில் வசித்து வருகின்றனர். அவர்கள் இருக்கும் இடத்தில் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், சபாரி என அனைத்தையும் அந்த பழங்குடியின மக்களே ஏற்று நடத்துகின்றனர். இதை மாசாய் மாரா மாடல் என்று அழைப்பார்கள்.

இதே மாடலை போன்று பவானிசாகரில் உள்ள பழங்குடியின அருங்காட்சியகத்தை முழுமையாக கட்டி முடித்து சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும். மேலும் இந்த சுற்றுலா தலத்தை இங்குள்ள பழங்குடியின மக்களே முழுமையாக ஏற்று நடத்த அனுமதிக்க வேண்டும். அதுமட்டுமின்றி ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், சபாரி போன்றவற்றையும் பழங்குடியின மக்களே ஏற்று நடத்த அனுமதிக்க வேண்டும். இதற்காக பழங்குடியின மக்களுக்கு தகுந்த பயிற்சி அளிப்பதுடன், பழங்குடியினருக்கு தேவையான திறன்களையும், நிபுணத்துவத்தையும் கற்றுக்கொள்வதற்கு உதவ அரசு முன்வர வேண்டும். அப்போதுதான் உண்மையான பழங்குடியின மேம்பாடு மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை காடுகளிலிருந்து அந்நியப்படுத்தாமல் ஏற்படுத்த முடியும்.

விரைவில் நிதி ஒதுக்க வேண்டும்

தமிழ்நாடு பழங்குடியினர் சங்கத்தின் மாநில பொருளாளர் கடம்பூர் ராமசாமி:-

தமிழ்நாட்டில் பழங்குடியின மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். அவர்களுடைய குழந்தைகளுக்கு முழுமையான கல்வி கிடைப்பதில்லை. இருட்டில் உள்ள பழங்குடியினர் வாழ்க்கை வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்றால் தமிழ்நாட்டில் முதன்முறையாக அமைக்கப்படும் இந்த பழங்குடியினர் அருங்காட்சியகத்துக்கு அரசு விரைவில் நிதி ஒதுக்கி பணியை முழுமை செய்து விரைவில் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வரவேண்டும்.

முழுமை பெறாமல்...

சமூக ஆர்வலர் ஆர்.சின்னசாமி:-

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பவானிசாகர் வனப்பகுதி காராச்சிகொரையில் தமிழ்நாட்டில் வசிக்கும் 7 வகையான பழங்குடி மக்களின் வாழ்க்கையை முறைகளை தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள பழங்குடியினர் அருங்காட்சியகம் பணி முழுமை பெறாமல் நின்றுள்ளது.

இந்த பணி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வந்தால் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள் பழங்குடியினர் என்ற ஒரு சமூகத்தை முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். மேலும் வனத்தை காப்பதில் பழங்குடியின மக்கள் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றனர் என்பதை மாணவ- மாணவிகள் அறிந்து கொள்ளவும் முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story