பி.பி.அக்ரஹாரத்தில்பரோட்டா போட்டு வாக்கு சேகரித்த அமைச்சர் நாசர்
அமைச்சர் நாசர்
ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தில் பரோட்டா போட்டு அதை பொதுமக்களிடம் வழங்கி அமைச்சர் நாசர் வாக்கு சேகரித்தார்.
தீவிர பிரசாரம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து வருகிறார்கள். அதன்படி நேற்று பால்வளத்துறை அமைச்சர் மு.நாசர் ஈரோடு பி.பி.அக்ரஹாரம் தர்கா வீதி, ஹாஜியார் வீதி உள்ளிட்ட பல்வேறு வீதிகளில் வாக்காளர்களை நேரில் சந்தித்து கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் தி.மு.க. அரசின் பல்வேறு சாதனைகளை விளக்கி கூறி பொது மக்களிடம் கை சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார். மேலும் அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் பரோட்டா போட்டு பொதுமக்களுக்கு வழங்கி வாக்கு சேகரித்தார்.
விட்டு சென்ற பணிகள்
முன்னதாக திறந்த ஜீப்பில் நின்றபடி அமைச்சர் நாசர் பேசும்போது கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்காக தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமகன் ஈவெரா இறப்பதற்கு முன்பே நிதி ஒதுக்கினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் இறந்து விட்டார். இதன் காரணமாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைக்கு உட்பட்டு பணிகளை தொடர முடியவில்லை.
இந்த பணிகள் அனைத்தையும், அவருடைய தந்தையும், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றவுடன் நிறைவேற்றுவார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த நீங்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு கை சின்னத்தில் வாக்களித்து அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன் எம்.எல்.ஏ.க்கள் சந்திரன் கோவிந்தராஜன் மற்றும் தி.மு.க., காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.