கோவில்பட்டியில் பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து பெண்ணிடம் 3½ பவுன் சங்கிலி பறித்தவர் சிக்கினார்
கோவில்பட்டியில் பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து பெண்ணிடம் 3½ பவுன் சங்கிலி பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
கோவில்பட்டி (மேற்கு):
கோவில்பட்டியில் கடைக்குள் புகுந்து பெண்ணிடம் 3½ பவுன் சங்கிலி பறித்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
சங்கிலி பறிப்பு
கோவில்பட்டியை அடுத்த பாண்டவர் மங்கலம் சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்த செந்தில்ராஜ் மனைவி சண்முகத்தாய் (வயது 56). இவர் இதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று பகலில் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் பிஸ்கட் கேட்டுள்ளார். அப்போது கடையிலிருந்த பிஸ்கட் பாக்கெட்டை சண்முகத்தாய் எடுத்து கொண்டிருந்த போது, திடீரென்று கடைக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.
கைது
இதுகுறித்து சண்முகத்தாய் அளித்த புகாரின் பேரில் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், ராமநாதபுரம் மாவட்டம் முத்துராமலிங்கபுரம், பாப்பு ரெட்டியபட்டி தெற்கு தெருவை சேர்ந்த சுப்பையா மகன் கோவிந்தசாமி (41) என்பவர், சண்முகத்தாயிடம் சங்கிலியை பறித்து சென்றது தெரிய வந்தது. இதை தொடர்ந்து மேற்கு போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து வழப்பறி செய்த தங்க சங்கிலியை போலீசார் மீட்டனர். மேலும் அவர் வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.