கடலூரில் பட்டப்பகலில் துணிகரம்: பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் ரூ.7 லட்சம் நகை கொள்ளைமர்ம நபர்கள் கைவரிசை


கடலூரில் பட்டப்பகலில் துணிகரம்: பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் ரூ.7 லட்சம் நகை கொள்ளைமர்ம நபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 25 Feb 2023 12:15 AM IST (Updated: 25 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் பட்டப்பகலில் பெண் போலீஸ் ஏட்டு வீட்டின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலூர்

கடலூர் கோண்டூர் ஜெயாநகரை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி பார்வதி (வயது 41). இவர் கடலூர் மகளிர் போலீசில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் பார்வதி வேலைக்கு சென்று விட்டார். அவரது கணவர் சரவணன் மட்டும் வீட்டில் இருந்தார். மதியம் அவரும் கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தனது குழந்தைக்கு சாப்பாடு கொடுப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார்.

சிறிது நேரம் கழித்து சரவணன் வீட்டுக்கு வந்து பார்த்த போது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டு பீரோவை சென்று பார்த்தார். அங்கே அவர்கள் வைத்திருந்த துணி மணிகள் சிதறி வெளியே கிடந்தன. அதில் இருந்த 18 பவுன் நகையை காணவில்லை.

ரூ.7 லட்சம் நகை கொள்ளை

இதை யாரோ மர்ம நபர்கள் அவர் வீட்டை விட்டு சென்றதை நோட்டமிட்டு வீட்டு கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, திறந்திருந்த பீரோவில் இருந்த 18 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும்.

இது பற்றி சரவணன் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கதிரவன், நாகராஜன் (குற்றப்பிரிவு) மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் கூப்பரும் வரவழைக்கப்பட்டது. அந்த மோப்ப நாய் சிறிது தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

வலைவீச்சு

மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் முக்கிய இடங்களில் இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். தொடர்ந்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இருப்பினும் கடலூரில் பட்டப்பகலில் பெண் போலீஸ் ஏட்டு வீட்டின் பூட்டை உடைத்து நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story