காசோலை மோசடி வழக்கில் தட்டப்பாறை பள்ளி தலைமை ஆசிரியைக்கு 6 மாதம் ஜெயில்


தினத்தந்தி 31 Jan 2023 12:15 AM IST (Updated: 31 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காசோலை மோசடி வழக்கில் தட்டப்பாறை பள்ளி தலைமை ஆசிரியைக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அருகே உள்ள செட்டியூரணியை சேர்ந்த சின்னத்துரை மனைவி சோமு (வயது 53). இவர், இதே ஊரில் உள்ள இந்து தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந் தேதி கோவில்பட்டி செண்பகவல்லிநகரைச் சேர்ந்த ராமசாமி மகன் பழனிச்சாமி (60) என்பவரிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதற்கு ரூ.5 லட்சத்திற்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி காசோலையை பழனிச்சாமியிடம் சோமு வழங்கியுள்ளார். இந்த நிலையில் காசோலையை 2017-ம் ஆண்டு மார்ச் 8-ந் தேதி பழனிச்சாமி வங்கியில் செலுத்தியபோது, பணம் இல்லையென திரும்ப அனுப்பப்பட்டது. இதையடுத்து பழனிச்சாமி கோவில்பட்டி விரைவு நீதிமன்றத்தில் சோமு மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையே 25-5-2020-ல் பழனிச்சாமி காலமானார்.

இதையடுத்து அவரது மகன் விஜயகுமார் வழக்கை தொடர்ந்து நடத்தினார். இந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்ற நீதிபதி முகமது சாதிக் உசேன் நேற்று தீர்ப்பளித்தார். காசோலை மோசடி குற்றத்திற்காக சோமுவுக்கு 6 மாத சிறை தண்டனையும், காசோலை தொகையை தரவில்லையென்றால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை வழங்கியும் அவர் தீர்ப்பு கூறினார்.


Next Story