மின்சாரம் தாக்கி மாணவர் பலியான வழக்கில் பொய் புகார் அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் தாய் புகார்


மின்சாரம் தாக்கி மாணவர் பலியான வழக்கில்  பொய் புகார் அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் தாய் புகார்
x

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் தாய் புகார்

ஈரோடு

சிவகிரி கந்தசாமிபாளையம் வடக்கு வீதியை சேர்ந்த ரவியின் மகன் ஹரிசங்கர் (வயது 17). கல்லூரியில் படித்து வந்த இவர் கடந்த 6-ந் தேதி கட்டிட வேலைக்காக சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியின் முன்பு போராட்டம் நடத்தினார்கள். மேலும், உரிய இழப்பீடு பெற்றுத்தரக்கோரி பல்வேறு அரசியல் அமைப்பினரும் கந்தசாமிபாளையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் ஹரிசங்கரின் தாய் கஸ்தூரி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-

எனது மகன் கட்டாயப்படுத்தி வேலைக்கு அழைத்து செல்லப்பட்ட இடத்தில் அவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தான். எனவே கட்டாயப்படுத்தி அழைத்து சென்றவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். இதற்கிடையே அவர்களது தவறை மறைப்பதற்காக எங்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் மீது பொய்யான புகார் மனு போலீசில் அளிக்கப்பட்டு உள்ளது. எனவே பொய் புகார் அளித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.

மனு கொடுக்கும்போது ஆதித்தமிழர் பேரவை நிதி செயலாளர் பெருமாவளவன், ஜெய்பீம் மக்கள் கட்சி தலைவர் அறிவழகன், திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story