அரசு நிலம் அபகரிப்பு வழக்கில்ஒப்பந்ததாரர் உள்பட 3 பேர் கைது
தேனியில் அரசு நிலம் அபகரிப்பு வழக்கில் ஒப்பந்ததாரர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு நிலங்கள் அபகரிக்கப்பட்டன. வடவீரநாயக்கன்பட்டியில் 109 ஏக்கர், தாமரைக்குளத்தில் 60 ஏக்கர், கெங்குவார்பட்டியில் 13 ஏக்கர் என மொத்தம் 182 ஏக்கர் நிலம் அரசு அதிகாரிகள் துணையுடன் அபகரிக்கப்பட்டு, பல்வேறு நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டதாக அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இதற்கு உடந்தையாக இருந்த 2 தாசில்தார்கள் உள்பட 7 பேர் கடந்த 2021-ம் ஆண்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும், பெரியகுளம் சப்-கலெக்டராக இருந்த ரிஷப் கொடுத்த புகாரின் பேரில், பெரியகுளத்தில் ஆர்.டி.ஓ.க்களாக பணியாற்றிய ஜெயப்பிரிதா, ஆனந்தி, தாசில்தார்கள் ரத்தினமாலா, கிருஷ்ணகுமார், நிலத்தை அபகரித்ததாக பெரியகுளம் முன்னாள் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ் உள்பட 14 பேர் மீது தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் மேலும் பலரின் பெயர்கள் இந்த வழக்குகளில் சேர்க்கப்பட்டன.
இந்த வழக்கில் தாசில்தார் கிருஷ்ணகுமார், அன்னபிரகாஷ் உள்பட 13 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில், வடபுதுப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த தர்மர் (வயது 58), அபிமன்னன் (51), அம்மாபட்டியை சேர்ந்த முத்துராஜ் (60) ஆகிய 3 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் தேனி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கைதானவர்களில் தர்மர் விவசாயி, அபிமன்னன் ஒப்பந்ததாரர், முத்துராஜ் தோட்டக்காவலாளி என்பது தெரியவந்தது. விசாரணையை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.