ஸ்டார்ச் மாவு கொள்முதல் மோசடி வழக்கில்7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது


ஸ்டார்ச் மாவு கொள்முதல் மோசடி வழக்கில்7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது
x

ஸ்டார்ச் மாவு கொள்முதல் மோசடி வழக்கில் 7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவரை பொலீசாா் கைது செய்தனா்

ஈரோடு

ஸ்டார்ச் மாவு கொள்முதல் மோசடி வழக்கில் 7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

ரூ.81¾ லட்சம் மோசடி

ஈரோடு பெருந்துறைரோட்டில் ஸ்டார்ச் மாவு தயாரிக்கும் நிறுவனத்தின் உதவி பொது மேலாளர் டிட்டோ கடந்த 2016-ம் ஆண்டு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறிஇருந்ததாவது:-

எங்களது நிறுவனத்தின் தொழிற்சாலை அந்தியூர் தாலுகா பூனாச்சியில் உள்ளது. ஈரோடு சூளை அருள்வேலவன் நகர் வானவில் வீதியை சேர்ந்த சாகுல்அமீது என்பவர் ரூ.4 லட்சத்து 34 ஆயிரத்துக்கு 15 டன் ஸ்டார்ச் மாவை கொள்முதல் செய்தார். அவரது அறிமுகத்தின் மூலமாக ஈரோடு முனிசிபல்காலனி மாணிக்கம் வீதியில் உள்ள அமுதம் ஏஜென்சி நிறுவன உரிமையாளர் சீனிவாசன் என்பவா் ரூ.27 லட்சம் மதிப்பிலான 119 டன் ஸ்டார்ச் மாவையும், ஈரோடு சத்திரோடு குமரகுருபரன் வீதியில் உள்ள அண்ணாமலையார் டிரேடிங் கம்பெனி உரிமையாளர் அண்ணாமலை என்கிற மணிகண்டன் (வயது 30) என்பவர் ரூ.50 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான 188 டன் ஸ்டார்ச் மாவையும் கொள்முதல் செய்தனர்.

இதற்காக 3 பேரும் காசோலை வழங்கி இருந்தனர். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது சேமிப்பு கணக்கில் பணம் இல்லை என்று திரும்பியது. எனவே சாகுல் அமீது, சீனிவாசன், அண்ணாமலை ஆகிய 3 பேரும் மொத்தம் ரூ.81¾ லட்சம் மோசடி செய்து உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார். இந்த மனுவை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

கைது

இதுகுறித்து ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த 2016-ம் ஆண்டு சீனிவாசன், சாகுல் அமீது ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் அண்ணாமலை தலைமறைவானார். அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் சேலத்தில் அண்ணாமலை பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது சேலம் பஸ் நிலையத்தில் வெளியூருக்கு தப்பி செல்வதற்காக நின்றிருந்த அண்ணாமலையை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரை ஈரோட்டுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கொள்முதல் செய்த ஸ்டார்ச் மாவை விற்று விட்டதாகவும், அதில் ரூ.10 லட்சத்தை சாகுல் அமீதுக்கு வழங்கியதாகவும் அண்ணாமலை தெரிவித்தார். 7 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணாமலை போலீசில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.


Next Story