சென்னையில் முதல்கட்டமாக 18 சாலைகள் குப்பை இல்லா சாலைகளாக மாற்றம் -மேயர் தகவல்


சென்னையில் முதல்கட்டமாக 18 சாலைகள் குப்பை இல்லா சாலைகளாக மாற்றம் -மேயர் தகவல்
x

சென்னையில் முதல்கட்டமாக 18 சாலைகளை வரும் 11-ந் தேதி முதல் குப்பைகள் இல்லாத சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள், வணிகர்கள் என நாள்தோறும் 5 ஆயிரத்து 200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வீடுகளுக்கே சென்று மக்கும், மக்காத குப்பைகளை தரம்பிரித்து குப்பை வண்டிகள் மூலமாக பெற்று வருகிறார்கள். மேலும், மாநகராட்சி சார்பில் தெருக்களின் முக்கிய பகுதிகளில் குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டும் சேகரிக்கப்படுகிறது.

இவைகள் லாரிகள் மூலம் குப்பை சேகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்தநிலையில், வரும் 11-ந்தேதி முதல் சென்னையில் முதல்கட்டமாக 18 சாலைகள் குப்பை இல்லாத சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

குப்பையில்லா பகுதிகள்

இதுகுறித்து மேயர் பிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தனியார் கடைகள், அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக சேகரிக்கும் வகையில் பச்சை மற்றும் நீல நிறத்திலான இரண்டு குப்பை தொட்டிகளை வைக்க மாநகராட்சியின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திடக்கழிவுகளை சாலை மற்றும் பொது இடங்களில் கொட்டுவது அல்லது தூக்கி எறிவதை தடுக்க மாநகராட்சியின் சார்பில் பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், திடக்கழிவு மேலாண்மையில் அடுத்தகட்ட நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் குப்பையில்லா பகுதிகள் என்ற திட்டத்தின்கீழ் முதல் கட்டமாக 18 சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அங்கு குறிப்பிட்ட இடைவெளிகளில் சிறிய வகை குப்பை தொட்டிகள் அமைத்தல், சிறிய குப்பை தொட்டியுடன் கூடிய மிதிவண்டிகளில் தூய்மை பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை ரோந்து பணியில் ஈடுபடுதல், சாலைகளில் குப்பைகளை கொட்டும் நபர்களின் மீது அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த 18 சாலைகளில் குப்பையில்லா பகுதிகளாக அறிவிப்பதன் மூலம் 74.3 கி.மீ. நீள சாலைகள், 196 பஸ் நிறுத்தங்கள் குப்பையில்லாமல் தூய்மையுடன் பராமரிக்கப்பட உள்ளன. இந்த 18 சாலைகளை குப்பையில்லாமல் பராமரிக்க ஏதுவாக 442 சிறிய வகையிலான குப்பை தொட்டிகள் அமைக்கப்பட உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'பயோ-மைனிங்'

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் 250 ஏக்கரில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கொட்டப்பட்டு வந்த 35 லட்சம் கன மீட்டர் அளவுள்ள குப்பைகளை 'பயோ-மைனிங்' முறையில் பிரித்து மறுசுழற்சி செய்து நிலத்தை மீட்டெடுக்கும் பணி 6 சிப்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசு மற்றும் சென்னை மாநகராட்சியின் நிதி பங்களிப்புடன் ரூ.350 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்துவருகிறது. இந்த திட்டத்தின் ஒப்பந்த காலம் வரும் 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் முடிந்து, நிலம் மீட்டெடுப்பு செய்யப்படும். தற்போது வரை சுமார் 57 சதவீதம் பணி நிறைவுற்ற நிலையில், 19.66 லட்சம் கனமீட்டர் அளவு குப்பைகள் 'பயோ-மைனிங்' செய்து முடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story