சென்னிமலை பேரூராட்சியில் மழை நீர் கால்வாய் அமைக்க ஒரு தரப்பினர் எதிர்ப்பு
சென்னிமலை பேரூராட்சியில் மழைநீர் கால்வாய் அமைப்பதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போலீஸ் பாதுகாப்புடன் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது.
சென்னிமலை
சென்னிமலை பேரூராட்சியில் மழைநீர் கால்வாய் அமைப்பதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போலீஸ் பாதுகாப்புடன் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது.
மழைநீர் கால்வாய்
சென்னிமலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் பஸ் நிலையம், சந்தைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மழைக்காலங்களில் வெளியேறும் மழைநீர் 6-வது வார்டுக்கு உள்பட்ட அய்யப்பா நகர் வழியாக வெளியேறும். சில சமயங்களில் அந்த பகுதியில் மழை நீர் தேங்கி விடுவதாக அய்யப்பா நகர் பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். அதனால் அங்கு மழை நீர் தேங்காமல் இருப்பதற்காக சென்னிமலை பேரூராட்சி சார்பில் ரூ.1 கோடி மதிப்பில் 11-வது வார்டுக்கு உள்பட்ட சோழன் வீதி வழியாக மழை நீரை கொண்டு செல்லும் வகையில் கால்வாய் அமைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதற்காக சென்னிமலை பஸ் நிலையம் அருகே தார் ரோட்டின் குறுக்கே பாலமும் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தை நிறைவேற்றினால் தங்கள் பகுதியில் மழை நீரோடு சாக்கடை நீர் தேங்கும் என 11-வது வார்டுக்கு உள்பட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 6-ந் தேதி பெருந்துறை தாசில்தார் தலைமையில் சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில் 6-வது வார்டு மற்றும் 11-வது வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.
எதிர்ப்பு
இந்த நிலையில் நேற்று சென்னிமலை பஸ் நிலையம் அருகில் உள்ள சோழன் வீதி வழியாக கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக 2 பொக்லைன் எந்திரங்கள் கொண்டுவரப்பட்டு குழி தோண்டப்பட்டது. அப்போது அங்கு வந்த 11-வது வார்டை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கால்வாய் தோண்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும் கலெக்டரின் உத்தரவுப்படி சாக்கடை கால்வாய் தோண்டப்படுவதாக, அந்த பகுதியில் எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களிடம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி கலெக்டரின் உத்தரவு நகலும் காண்பிக்கப்பட்டது.
பரபரப்பு
இதைத்தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சென்னிமலை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் சோழன் வீதி வழியாக கால்வாய் தோண்டும் பணி நடைபெற்றது.